மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

மார்கழி மாதம் 10ம் நாள்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் சிறப்புகள்

மார்கழி 10ம் நாள்: ஆண்டாள் மற்றும் மாணிக்கவாசகர் பாடல்களின் பொருளும் விளக்கமும்!
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் பத்தாம் நாளான இன்று..

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

திருப்பாவையில், ஆண்டாள் பாவை நோன்பு நூட்பதற்காக ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் ஒரு தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள். எப்படித்தெரியுமா?

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

என்கிறார்.

இதன் விளக்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!- தோழியே அடுத்த இல்லத்தில் கிருஷ்ணன் இருப்பதால் தினமும் நீ நோன்பு நூர்க்காமல் அவனை தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற பெண்ணே..

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்... நாங்கள் இத்தனை அழைத்தும் வாய்தான் திறக்கவில்லை என்றாலும் கதவையும் திறக்க மறுக்கிறாயே...

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்... கிருஷ்ணன் தலையில் அணிந்துக்கொள்ளும் துளசியானது உனது இல்லத்தில் பரவி இருக்கிறதே.. அந்த நாராயணை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனைத்தருவானே..

திருப்பாவை ஆண்டாள்
திருப்பாவை ஆண்டாள்

பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும், தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?... முன்பு தூக்கத்திற்கு உதாரணமாய் கும்பகர்ணனை சொன்னார்கள். ஆனால் நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறதே...

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்... ஆகையால் சோம்பலையும், தூக்கத்தையும் கைவிட்டு, எழுந்து வந்து கதவைத்திற... என்று அருமையான பாசுரத்தை பாடி தோழியை எழுப்புகிறார்.

திருவெம்பாவை

அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை

மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 10ம் நாளான இன்று அண்ணாமலையாரை தரிசிக்க தோழிகள் தோழியை எழுப்புகிறார்கள்... எப்படி தெரியுமா?

இறைவன் சிவபெருமான் அடி முடி அறிய முடியாதவன். வானுக்கும் பூமிக்குமாய் உயர்ந்து நின்றவன். அவனது திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழுக்கும் கீழாய், என்ற சொல்லுக்கு படாதவையாய் இருக்கும்; மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் முடிவிடமாய் இருக்கிறது என்கிறார். இதனை.,

பாடலாக...

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

“ ‘தோழியே... நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது.

பார்வதி தேவிக்கு சக்தியாய் தனது ஒரு அங்கத்தினை கொடுத்ததால், அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், தேவர்களும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் எல்லையில்லா அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது.

யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் சிவபெருமான் உற்ற தோழன். ஏராளமான பக்தர்களைக்கொண்டவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!’ என்று சிவபெருமான் மேல் கொண்ட பக்தியைக்கூறி தோழியை தலைவி எழுப்புகிறார்” என்று மாணிக்கவாசகர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com