மார்கழி மாதம் 24ம் நாள் - திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்களின் சிறப்பு
மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 24 வது பாடலையும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியின் 4 பாடல்களையும் இனி பார்க்கலாம்.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
திருப்பாவை
மார்கழி பாடல்களிலேயே மிகச்சிறப்பு உடையது இந்த பாசுரம். இதில் வாமன, ராம, கிருஷ்ணனின் குழந்தைப்பருவ பெருமைகளை கூறி, போற்றி பாடப்பட்டுள்ளது.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பாசுரத்தின் விளக்கம்
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி... வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி இடம் கேட்டு, அனைத்தும் என்னுடையதே என்று உணர்தியவனே... உனக்கு சரணம்
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி.... ராமாவதாரம் எடுத்து சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு சரணம்.
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி... சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு சரணம்.
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி... கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உனக்கு சரணம்
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி... ஆயர்குலத்தவரை கோவர்த்தனகிரியைக்கொண்டு காத்தவனே... உனக்கு சரணம்
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி... பகைவர்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் உன் கையிலுள்ள சிறு வேலால் அழித்தவனே, உனக்கு சரணம்.
இப்படி உன் புகழைப்பாடிக்கொண்டு உன்னை தரிசிக்க வந்த எங்கள் மீது கருணைக்கொண்டு எழுந்து வருவாயாக... என்று கோபிகைகள் சூழ ஆண்டாள் கண்ணனை எழுப்புகிறாள்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் - 4 மாணிக்கவாசகர் பாடியது
ஆவுடையார் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருப்பள்ளி எழுச்சி பாடி சிவனை எழுப்புகிறார் மாணிக்கவாசகர். இந்த பாடலில் மாணிக்கவாசகர் தான் அடியவருக்கும் அடியவர், ஆகையால் அவர்களுடன் சேர்ந்து என்னையும் ஆட்கொள்வாயாக என்று இறைவனை வேண்டித் துதிக்கின்றார்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
இந்த பாசுரத்தின் விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர் களு மாக ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறை வனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும் என்கிறார்.