மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் விளக்கத்துடன்...
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

திருப்பாவையின் 22வது பாடல், திருப்பள்ளி எழுச்சியின் 2வது பாடல்

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இதில் திருப்பாவையின் 22 வது பாடலையும் திருவெம்பாவையின் 20 பாடல்கள் முடிந்த நிலையில், மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலில் பாடிய திருப்பள்ளியெழுச்சியின் 2 பாடல்களையும் இனி பார்க்கலாம்.

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

பாடல்:

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே...

பொருள்:

“கண்ணா! இந்த உலகில் எங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை என்று பெருமையடித்துக் கொண்டவர்களும், பெரியவர்களும், அரசர்களும், வசதி படைத்தவர்களும், என அஸ்தஸ்தில் உயர்தவர்களாகக் கருதப்படுபவர்கள் என்று அனைவரும் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

ஆண்டாள்
ஆண்டாள்PT

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?... எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்... சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!” என்பதாகும்

திருப்பள்ளி எழுச்சி பாடல் - 2

மாணிக்கவாசகர் பாடியது...

பாடல்:

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழுவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்

திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில்

பொருள்:

“திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியன் கிழக்கே வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com