இந்திரனின் விளையாட்டால் நேர்ந்த வினை! சாபத்தால் கல்லான ’அகலிகை’.. சாப விமோசனம் கொடுத்த ராமர்!

அசுரர்களான சுபாகு, மாரீசன் இருவரும் யாகத்திற்கு இடையூறு விளைவிக்க முயல்கின்ற சமயத்தில், ராமர் மாரீச்சனைத்தவிர எல்லோரையும் கொன்று விடுகிறார். ராமனுக்கு பயந்த மாரீசன் கடலின் அடியில் ஒளிந்து கொள்கிறான்.
அகலிகை சாப விமோசனம்
அகலிகை சாப விமோசனம்PT

மாரீசனை தேடிச் சென்ற ராமர்!

தாடகை வதம் முடிந்து விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை தனது யாகசாலையை இருக்கும் இடமான சித்தாஸ்ரமம் அழைத்துச் செல்கிறார். அந்த இடத்தை அடைந்த ராமர், விஸ்வாமித்திரரை தனது யாகத்தை நிறுத்தாமல் தொடர வேண்டுகிறார்.

ஆனால், அரக்கர்களால் யாகத்திற்கு இடையூறு இருப்பதை விஸ்வாமித்திரர் தெரிவித்ததும், அரக்கர்களால் யாககுண்டத்திற்கு எதுவும் இடையூறு ஏற்படாமல் இருக்க யாக சாலை மீது அம்புகளால் ஆன கூடாரத்தை அமைத்து, ராமர், லட்சுமணரும் அந்த இடத்தை கண்ணை இமைக்காத்தது போலக் காத்தனர். அச்சமயத்தில் அசுரர்களான சுபாகு, மாரீசன் இருவரும் யாகத்திற்கு இடையூறு விளைவிக்க முயல்கின்ற சமயத்தில், ராமர் மாரீச்சனைத்தவிர எல்லோரையும் கொன்று விடுகிறார். ராமனுக்கு பயந்த மாரீசன் கடலின் அடியில் ஒளிந்து கொள்கிறான்.

ஆளரவமற்ற பாழடைந்த ஆசிரமம்! ராமரின் கேள்வி

பிறகு விஸ்வாமித்திரர் ராமர் லட்சுமணரின் உதவியால், தனது யாகத்தை முடித்துக்கொண்டு, சித்தாஸ்ரமத்திலிருந்து கிளம்பி மிதிலை புறப்பட்டார். அவர்களுடன் ராமரும் லட்சுமணரும் புறப்பட்டு சென்றனர். மிதிலை செல்லும் வழியில் ஆளரவமற்ற பாழடைந்த ஆசிரமம் ஒன்று தென்பட்டது. ”இது யாருக்கு சொந்தமான ஆஸ்ரமம்?” என்று ராமர் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்க, விஸ்வாமித்திரர் “இது கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமம். தனது மனைவி அகலிகையுடன் இங்கு வசித்து, தவம் செய்து வந்தார். ஆனால் ஒருமுறை அவருடைய கோபத்தால் இந்த வனம் சபிக்கப்பட்டு இப்படி அலங்கோலம் ஆனது” என்றார். ராமரும் இதைப்பற்றி விளக்கமாக கூறுமாறு கேட்கவே, விஸ்வாமித்திரரும் அவர்களிடம் அகலிகை பெற்ற சாபத்தை கூறுகிறார்.

அகலிகை சாபம் பெற்றது ஏன்?

அகலிகையை மணக்க விரும்பினான் இந்திரன். ஆனால் கௌதம முனிவரின் மனைவியாக மாறினாள் அகலிகை. இருந்தாலும் அகலிகையின் மேல் மோகம் கொண்ட இந்திரன் எப்படியாவது அவளை அடைந்து தீருவதென்று பிடிவாதமாய் இருந்தான். கௌதம முனிவர் அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரை சென்று காலைக் கடன்களை முடித்து தியானம் செய்வது வழக்கம். இதைத் தெரிந்துக்கொண்ட இந்திரன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அகலிகையை அடைய நினைத்தான்.

ஒருநாள், யாரும் அறியாதவாறு கௌதம முனிவரின் ஆஸ்ரமம் வந்த இந்திரன், பொழுது விடிவதற்கு முன்பாகவே தான் சேவல் போன்று குரலை எழுப்பினான். இதைக்கேட்ட கௌதமர், ”அடடே.. பொழுது விடிந்துவிட்டது நித்திய காரியங்களில் ஈடுபடவேண்டும்.” என நினைத்து, ஆற்றங்கரை நோக்கி புறப்பட்டு சென்றுவிட்டார். அச்சமயம் இந்திரன் கௌதமரின் தோற்றத்தைப்பெற்று, அகலிகையுடன் தவறாக நடந்துக்கொண்டான்.

கணவன் யார்?, அடுத்த ஆடவர் யார்? என தெரியாதா?

ஆனால் ஆற்றங்கரை சென்ற கௌதமருக்கு, இன்னும் பொழுது புலரவில்லை என்று தெரிந்ததும், மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பினார். அச்சமயம் இந்திரன் கௌதமர் வருவதை தெரிந்துக்கொண்டு ஒரு பூனையின் உருவத்தில் தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து நழுவினான். இருப்பினும், கௌதமருக்கு வந்திருந்தவன் இந்திரன் என்று தெரிந்ததும், அவனுக்கு சாபத்தை அளித்தார்.

அதேபோல் அகலிகைக்கும், கணவன் யார்?, அடுத்த ஆடவர் யார் என்பது கூடவா ஒரு பெண் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பாள்?, அல்லது தெரிந்திருந்தும் அதைத் தடுக்க முற்படாமல் இருந்ததால் எனக் கோபம் கொண்டு, அகலிகை கல்லாக மாற சாபத்தை அளித்தார்.

இந்நிகழ்சிக்கு பிறகு கௌதமரும் இவ்வனத்தை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு இங்கு எவருமில்லையாததால், இவ்வனம் இவ்வாறு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது என்று கூறினார்.

சாப விமோசனம் அடைந்த அகலிகை!

அச்சமயம், இதை அமைதியாக கேட்டு வந்த ராமரின் காலில் ஒரு கல் இடரவே... அக்கல்லிலிருந்து அகலிகை தோன்றினாள். அவள் ராமரை வணங்கி, ”என் கணவர் என்னை சபித்ததும் நான் கல்லாக மாறிவிட்டேன். இருப்பினும் சாபவிமோசனம் பெரும் பொருட்டு அவரை நான் வேண்டவும், ஏகபத்தினியான ராமரின் பாதம் உன்னை தீண்டும் சமயம் நீ தூய்மையானவளாக மாறி என்னை வந்தடைவாய்” என்று சாபவிமோசனமும் தந்தார்.

“இதோ அந்த நாளும் வந்து விட்டது. உங்களின் பாதம் பட்டவுடன் நான் விமோசனம் அடைந்துவிட்டேன். உங்களை காணும் பாக்கியமும், உங்களின் ஆசியும் பெற்றுவிட்டேன்” என்றவள், ராமரை வணாங்கி அவரின் ஆசியை பெற்றாள். பிறகு கௌதம முனிவருடன் வாழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com