நிருபர் - ரமேஷ் கண்ணன் (தேனி)
பிரசித்தி பெற்ற சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டது. மண்டல பூஜைக் காலத்தில் மட்டும் சபரிமலையில் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துளளனர்.
இந்நிலையில், மகர விளக்கு பூஜைக் காலத்தின் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 02.30 மணிக்கு பள்ளி உணர்தலோடு நடை திறக்கப்பட்டது.
புத்தாண்டு சிறப்பு கணபதி ஹோமம், ஐயப்பனுக்கு பிடித்த நெய் அபிஷேகம் மற்றும் இதர அபிஷேக ஆராதனைகளோடு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று ஐயப்பனை தரிசித்தால், ஆண்டு முழுவதும் சகல ஐஸ்வரியங்களும் பாக்கியங்களும் கிடைக்கும் என்ற ஐதீகம் மற்றும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
தரிசனத்திற்காக வெர்ச்சுவல் க்யூ மூலம் அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் "வெர்ச்சுவல் க்யூ" வழி மட்டும் 78,402 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஸ்பாட் புக்கிங், கானகப்பாதை வழிகளில் வந்தவர்கள் என புத்தாண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இன்றும் (02.01.24) பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கூட்டத்தை சமாளிக்க இரு முடியோடு 18 ஆம் படியேறும் பக்தர்களை மணிக்கு ஐந்தாயிரம் பேரை கடத்திவிடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.