"மகர ஜோதி தரிசனம்" – சபரிமலை எங்கும் சரணகோஷம் - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில், மகர நட்சத்திர தினமான இன்று (ஜனவரி 14ம் தேதி) ஐயப்பனுக்கு பிரதான "மகர விளக்கு பூஜை", பந்தள மகராஜா வழங்கிய "திருவாபரணங்கள்" சார்த்திய ஐயப்பனுக்கு மகா தீபாரதனை, பொன்னம்பல மேட்டில் "மகர ஜோதி" தரிசனம் ஆகியன நடக்கின்றன. இந்த சிறப்பு நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தில் சபரிமலை திணறி வருகிறது.
முன்னதாக பக்தர்கள் கூட்டத்தை கட்டுக்குள் வைக்க, ஜனவரி 12 ம் தேதி முதலே பக்தர்களின் தரிசன அனுமதி எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் (12.01.25) பக்தர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று (ஜனவரி 13ம் தேதி) அந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைக்கப்பட்டாலும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 14 தேதி) பக்தர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 9 முதல் நேற்று (ஜனவரி 13ம் தேதி) வரை, "ஸ்பாட் புக்கிங்" 10 ஆயிரத்தில் இருந்து 5000 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசன நாளான இன்று (ஜனவரி 14 ஆம் தேதி) ஸ்பாட் புக்கிங் 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகர ஜோதி தரிசனத்திற்காக கடந்த மூன்று நாட்களாக சபரிமலை வந்த பக்தர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
இதனால் சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்கள் அனைத்தும் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளது. அனைவருக்கும் சுகமான சாமி தரிசனம் மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், போலீஸ் மற்றும் இதர கேரள அரசுத் துறைகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்திற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.