திருப்பாவை, திருவெம்பாவை
திருப்பாவை, திருவெம்பாவை புதியதலைமுறை

திருப்பாவை, திருவெம்பாவை - மார்கழி நாள் 3... தலா 1 பாடலும், அதற்கான விளக்கமும்!

இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். அதன்படி மூன்றாம் நாளான இன்றும்...
Published on

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.

அதன்படி மூன்றாம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

ஒருவர் மேல் காதல் வயப்பட்டால், அவர்களின் குணங்களை பெருமையாக நண்பர்களிடம் தோழிகளிடம் சொல்வதை பார்த்து இருப்போம். அது போன்றுதான் ஆண்டாளும், பெருமாள் மேல் கொண்ட காதலால், அவரின் பெருமையை தனது தோழிகளிடத்தில் கூறி அவர்களை துயில் எழுப்பி நோன்பு நூற்க அழைக்கிறார்.

பாடல்:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள், ரெங்கமன்னார்
ஆண்டாள், ரெங்கமன்னார்PT

பாடலுக்கு விளக்கம்

“தோழியே... கண்ணன் யார் தெரியுமா? நம் பரந்தாமன், சிறுவனாக வாமன அவதாரம் கொண்டு தனது மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டு, மகாபலிக்கு காட்சி கொடுத்த உத்தமன்.

அப்படிப்பட்ட அவரது சிறப்பைக் குறித்து பாடவேண்டுமல்லவா...? ஆகையால் சீக்கிரம் எழுந்திருங்கள். நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த பாவை நோன்பு விரதமிருப்பதால், நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை வாரி வழங்கும். இத்தகைய நோன்பு நூட்க சீக்கிரம் எழுந்து வாருங்கள்” என்று ஆண்டாள் இந்த பாசுரத்தில் இயற்றியுள்ளார்.

திருவெம்பாவை

அடுத்ததாக மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் 3-ஐ பார்க்கலாம்.

திருவண்ணாமலையில், அதிகாலை வேளையில், சிவபெருமான் அண்ணாமலையாராகவும், உமையாள் உண்ணாமலையாகவும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவர்களை காண முப்பத்து முக்கோடி தேவர்களும், பூதகணங்களும் கைலாசத்தில் தவமிருக்கையில், இவர்கள் தங்களின் வீதி வழியே உலா வருவதை காணாமல் தோழி தூங்குகிறாளே என்று மற்ற தோழிகள் தூங்குபவர்களை எழுப்பி, சிவபெருமான் தரிசனத்தைக்காண அழைக்கின்றனர். அதை அழகாக மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் 3வது பதிகமாக இயற்றியுள்ளார்.

பாடல்:

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

இப்பாடலுக்குப் பொருள்

தோழி மற்றொரு தோழியை எழுப்புகிறாள்... ‘அழகியே...முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே எழுந்து ஸ்நானம் செய்து தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் ஆகியும் நாங்கள் எழுப்பியும் எழ மறுக்கிறாய். முதலில் கதவைத் திற’ என்கிறார்

தூங்கிக் கொண்டிருந்த தோழி பதிலளிக்கிறாள், ‘ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!’ என வருந்திச் சொல்கிறாள்.

வந்த தோழியர் அவளிடம், ‘அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே நீ சிவபெருமானை துதித்து பாடல் பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்’ என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com