“காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா” - சரண கோஷம் முழங்க கானகப்பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்!

எல்லா பாரத்தையும் ஐயப்பன் மேல் போட்டு விட்டு வன விலங்குகளைக் கூட சரண முழக்கங்களால் விரட்டி, வசதி வாய்ப்புகள் எதையும் எதிர் பாராமல் மெய்வருத்தி, உயிரை துச்சமாக்கி ஐயப்பனை தரிசித்து வந்த காலமெல்லாம் இருந்தது.
sabarimalai
sabarimalaipt desk

செய்தியாளர் - ரமேஷ் கண்ணன்

பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு செல்ல "மலைக்குப் போவதாக"த்தான் அந்தக் காலத்தில் சொல்வார்கள். அத்தனை சிரமம் சபரிமலை சென்று திரும்புவது. 18 மலைகள் சூழ்ந்த அடர்ந்த வனத்திற்குள் மழை வெயில் பாராமல், சாப்பாடு, தண்ணீர் இன்றி, கிடைத்த இடத்தில் படுத்தெழுந்து, கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான கானகப் பாதைகளில் நெடுந்தூர மலைப் பயணம்... அதுவும் நடை பயணம்.

Sabarimalai
Sabarimalaipt desk

எல்லா பாரத்தையும் ஐயப்பன் மேல் போட்டு விட்டு வன விலங்குகளைக் கூட சரண முழக்கங்களால் விரட்டி, வசதி வாய்ப்புகள் எதையும் எதிர் பாராமல்...மெய்வருத்தி, உயிரை துச்சமாக்கி ஐயப்பனை தரிசித்து வந்த காலமெல்லாம் இருந்தது. அதனால் தான் "சபரிமலைக்கு போறவர்களை திரும்பி வந்தால்தான் உண்டு" என்றும் சொல்வதுண்டு. ஆனால் தற்போது சபரிமலை பயணத்தின் நிலைமையே வேறு...

sabarimalai
'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..' சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

நிறுத்தக் கூட இடம் போதாத அளவிற்கு அணிவகுத்து வரும் வாகனங்களில் ஐயப்ப பக்தர்களின் வருகை உள்ளது. நடந்து செல்லும் பாதைகள் துவங்கி, சபரிமலை சன்னிதானம் வரை குடிநீர், உணவு, கழிவறை, ஓய்வறை என சகல வசதிகளும் கிடைக்கிறது. மொத்தத்தில் ரணம் கொள்ளாத காத்திருப்பு இல்லாத சுகமான சபரிமலை தரிசனத்திற்கு பழகிப் போனார்கள் ஐயப்ப பக்தர்கள்.

Sabarimalai
Sabarimalaipt desk

அதனால்தான் எத்தனை வசதிகள் இருந்தும் எதுவும் போதவில்லை என குறைகூறும் அளவிற்கு பக்தர்களின் சபரிமலை தரிசன முறையில் மாற்றங்கள் தொடர்கின்றன. ஆனாலும் கடும் விரதத்தோடு தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் எரிமேலியை அடுத்த பெருவழிப் பாதை, வண்டிப்பெரியாரை அடுத்த சத்திரம் புல்மேடு பாதை என மிகவும் கடினமான பாதைகளில் ஐயப்பனை தரிசிக்க சில பக்தர்கள் நடந்தே வருகின்றனர்.

கல்லும் முள்ளும் நிறைந்த இந்த கானகப் பாதைகளில் காலணி கூட இல்லாமல் தங்களை ரணப்படுத்தி பக்தர்கள் பயணிக்கின்றனர். காலங்கள் மாறினாலும் சபரிமலைக்கு செல்லும் கானகப் பாதைகள் தற்போதும் அதே பழமை மாறாமல் இருக்கின்றன. அடர் வனத்தின் ஊடே கரடு முரடான அந்த கானகப் பாதைகளின் வழியே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

Sabarimalai
Sabarimalaipt desk

பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே வந்த பக்தர்களும் இந்த கானகப் பாதையில் பயணத்தை தொடர்கின்றனர். கானகப் பாதைகளில் மனமுருக ஐயப்பனை நினைத்து வனம் முழுக்க மேளதாள முழக்கங்களோடு சரண கோஷம் எழுப்பிச் செல்வது பக்தி பரவசத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது.

இதுவரை கானகப் பாதைகளில் மட்டும் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக சபரிமலை வந்துள்ளதாகவும், தினசரி சராசரியாக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வரை பக்தர்கள் கானகப் பாதை வழி வருவதாகவும் வனத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. வன விலங்குகளின் அச்சம் தவிர்த்து ஐயப்பனை மட்டுமே நினைத்து பக்தியோடு பயணிக்கும் இந்த பக்தர்கள் கூட்டம் பழங்கால சபரிமலை பயணத்தை உருக்குலைக்காமல் காத்து வருகிறது என்பது நிதர்சனமாகியுள்ளது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com