பதினாறுடன் நிறைவுபெற இருந்த ஆதிசங்கரரின் ஆயுளை உயர்த்திய வியாசர்... எதற்காக தெரியுமா?

“நான் துறவரம் மேற்கொள்ளவேண்டும். துறவரம் ஒரு மனிதனின் மறு பிறவி... ” என்ற சங்கரரை, அவர் விருப்பப்படியே துறவரம் மேற்கொள்ள சம்மதித்தாள் தாய் ஆரியாம்பாள்.
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்PT

முதல் பாகம் சுருக்கம்: சிறு வயதிலேயே உபநயனம் செய்யப்பட்டு குருகுலத்தில் அனைத்து வேத பாராயணங்கள், அத்வைதங்கள், புராணங்கள், சாஸ்திர சம்பிரதாயங்களை கற்று தேர்ந்த சங்கரர், தனது தாய் ஆர்யாம்பாளுக்கு உதவியாக இருக்க பூர்ணா நதியை தன் வீட்டின் வழியே ஓடவைத்தார். இதை கண்ட ஆர்யாம்பாளும் ஊர் மக்களும் மகிழ்சியடைந்தனர்.

இனி நடப்பவற்றையும் புராணக்கதைகளின் வழியே இங்கு காணலாம்...

சங்கரருக்கு எட்டு வயதான சமயம். ஒருமுறை பூர்ணா நதிக்கு தாயுடன் சென்றார் சங்கரர். அப்போது அங்கிருந்த முதலை ஒன்று அவரின் காலை கவ்வி இழுத்தது. சங்கரரின் அலறலை கேட்ட தாய் ஆர்யாம்பாள், துடித்து விட்டாள். சங்கரரின் ஜாதகத்தை கணித்த ‘ஜோதிடர் குறிப்பிட்டது போல குறைந்த ஆயுளைக்கொண்ட என் குழந்தையை இழந்துவிடுவேனா’ என்று நினைத்து கதறினாள். தாயின் கதறல் சங்கரரை நிலைகுலைய செய்தது.

//அறிவோம் சங்கரரை... (1)
திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைக்காவல் ஆலயத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார், ஆரம்ப காலத்தில் மிகவும் உக்கிரமாகக் காட்சி தந்திருக்கிறாள். அவளின் உக்கிரங்களை அடக்கும் பொருட்டு இரண்டு சக்கரங்களை மந்திர உச்சாடனம் செய்து தாடங்கங்களாக (தோடுகள்) அம்பிகையின் இரண்டு காதுகளிலும் அணிவித்துள்ளார். இதன்மூலம் தாயாரை சாந்தமடைய செய்து இருக்கிறார் சங்கரர். இன்றும் அந்தச் சக்கர தாடங்கம் அன்னை அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் ஜொலிக்கிறது.//

முதலையிடம் சிக்கிய சங்கரர், தாயிடம் பேசுகிறார்...

சங்கரர்: “அம்மா... அழாதே... இப்பிறவியில் நான் முதலையால் கொல்லப்படவேண்டும் என்று விதித்துள்ளது போலும்”

தாய்: “சங்கரா... அப்படி சொல்லாதே... நீ வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவன். உன் தெய்வீக தன்மையை நான் அறிவேன். இம்முதலை பிடியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ள ஏதாவது உபாயம் இருக்கும் சங்கரா... அதை செயல்படுத்து”

சங்கரர்: “ஒரு உபாயம் இருக்கிறது. அதற்கு உன் அனுமதி தேவை...”

தாய்: “நீ உயிருடன் இருப்பாய் என்றால் எத்தகைய உபாயம் என்றாலும் என் அனுமதி உனக்கு உண்டு”

சங்கரர்: “அப்படி என்றால் நான் துறவரம் மேற்கொள்ள வேண்டும். துறவரம் ஒரு மனிதனின் மறு பிறவி... ”

இதைக்கேட்டவுடன், சங்கரரை துறவரம் மேற்கொள்ள சம்மதித்தாள் ஆர்யாம்பாள்.

அந்நிமிடமே ஆபத் சந்நியாசம் என்ற முறையில் தனக்கு தானே மந்திரத்தை கூறி துறவு பூண்டார் சங்கரர். முதலையும் அவரின் காலை விட்டுச் சென்றது.

//அறிவோம் சங்கரரை... (2)
கைலாயத்திலிருந்து சங்கரர் கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களை பசுபதிநாத், பூரி, சிருங்கேரி, காஞ்சி, காசி ஆகிய ஐந்து திருத்தலங்களில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்//

துறவரம் மேற்கொண்ட சங்கரர் யாத்திரையாக தனக்கான குருவைத்தேடி சென்றார். இவ்வாறு யாத்திரையாக சென்ற சங்கரர் நர்மதை நதிக்கரை வந்தடைந்தார். நர்மதை கரையில் கோவிந்த பகவத் பாதர் சங்கரரின் ஞானத்தை தெரிந்துக்கொண்டு அவரை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.

பின்னர், முறைப்படி துறவறம் மந்திரம் உபதேசித்து கோவிந்தர் சங்கரருக்கு சன்யாசம் அளித்தார். குருவிடம் சங்கரர் அத்வைத சித்தாந்தத்தை கற்று அவரின் ஆணைப்படி அத்வைதத்தை பரப்ப யாத்திரை மேற்கொண்டார்.

சங்கரர்
சங்கரர்

பாரதம் முழுக்க அத்வைதத்தை பரப்பி வந்த அவர், வடக்கே காசிக்கு சென்றடைந்தார். அங்கே பல சீடர்கள் அவரை குருவாக ஏற்றுக்கொண்டனர். அதில் ஒரு சீடர் தான் சநந்தனர். குருபக்தி மிக்கவர்.

ஒருநாள் காசியின் மணிக்கர்ணிகை என்ற இடத்திற்கு அருகில், ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் எதிர்புறம் அமர்ந்து தியானம் செய்துக்கொண்டிருந்த சங்கரர், எதிர் கரையில் இருந்த தனது சீடரான சநந்தனரை அழைத்தார். குரு அழைத்தார் என்றதும், சநந்தனர் யோசிக்காமல் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்தாராம். இதைக்கண்ட சங்கரர், சநந்தனர் நடக்கையில் அவரது பாதம் நனையாமல் இருக்க ஒவ்வொரு அடிக்கும் ஒரு தாமரையை மலரச்செய்து அதில் அவர் நடக்குமாறு செய்தாராம்!

தாமரை மலரில் அவர் நடந்து வந்ததால் சங்கரர் அவருக்கு பத்மபாதர் என்ற பெயரிட்டு அழைத்தார்.

//அறிவோம் சங்கரரை... (3)
ஸ்ரீ சௌந்தர்யலஹரி, ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் முதலான அரும்பெரும் பொக்கிஷங்களும் நமக்குக் கிடைக்கச்செய்தவர் சங்கரர்.//

ஆசிரியரானவர், எப்பொழுதும் தன் மாணவரின் அறிவு திறனை சோதித்து பார்க்க விரும்புவதுண்டு. அதே போல் ஒரு நிகழ்வு சங்கரருக்கும் நடந்தது.

ஒருசமயம் சங்கரரை பார்க்க வயதான முதியவர் ஒருவர் வந்தார். வந்தவரை வரவேற்ற சங்கரர், அவர் கேட்ட பிரம்ம சூத்திர பாஷ்யத்தின் அத்தனை கேள்விக்கும் பதில் அளித்து வந்தார். ஆனால் அப்பதிலால் அம்முதியவர் திருப்திப்படவில்லை. மறுபடி மறுபடி கேள்விகளும் விளக்கங்களும் கேட்டபடி இருந்த அந்த முதியவர் யார் என்று அறிந்துக்கொள்ள தன் மனக்கண்ணால் பார்த்த சங்கரருக்கு, வந்திருந்த வயோதிக ஞானி வியாசர் என்பது தெரிந்தது.

“சங்கரரே... நீ எழுதிய ப்ரம்ம சூத்திரத்திற்கான உரையை நான் ஏற்கிறேன். அதன் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. ஆகவே பதினாறுடன் நிறைவுபெறவேண்டிய உனது ஆயுளை இன்னும் பதினாறாக உயர்த்துகிறேன். நீ ப்ரம்ம சூத்திரபாஷ்யத்தை உலகம் முழுதும் பரப்பு” என்று கூறிய வியாசர், அவரது ஆயுளை அதிகரித்ததாக புராணங்கள் கூறுகிறது.

சங்கரரின் புராண வரலாறு தொடரும்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com