"உக்ரைன் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" - அமெரிக்கா சூசகம்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்கள் குழுவிடம் பேசிய ஆஸ்டின், "வெற்றி பெறுவதற்கான முதல் படி, நம்மால் வெற்றி பெற முடியும் என்று நம்புவதுதான். எனவே வெல்ல முடியும் என்று அவர்கள்( உக்ரைன்) நம்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது, அதனால் இத்தனை இழப்புகளுக்கு பின்பு அது மீண்டும் படையெடுக்க முடியாது என அமெரிக்கா கருதுகிறது. இந்த சூழலில் உக்ரைன் சரியான உபகரணங்களை வைத்திருந்தால் போரில் வெற்றிபெற முடியும் என்று பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் கீவ் பயணத்தை முடித்து திரும்பியபோது கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிப்ரவரி 24 அன்று ரஷ்ய தாக்குதல் தொடங்கிய பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை லாயிட் ஆஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்தனர். அமெரிக்க தூதர்கள் இந்த வாரம் உக்ரைனுக்கு படிப்படியாக திரும்பத் தொடங்குவார்கள் என்று ஆஸ்டின் மற்றும் பிளிங்கன் கூறியதுடன், கூடுதல் இராணுவ உதவியாக 700 மில்லியன் டாலர்களை (653 மில்லியன் யூரோக்கள்) உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர்.
மேலும், "ரஷ்யா ஏற்கனவே அதன் நிறைய இராணுவத் திறனை இழந்துவிட்டது. மேலும் அதன் துருப்புக்களில் நிறைய பேர் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால் மிக விரைவாக இதனை மீட்டுருவாக்கம் செய்யும் திறன் ரஷ்யாவிடம் இல்லை " என்று ஆஸ்டின் கூறினார்.