'உக்ரைனுக்கு கட்டாயம் வர வேண்டும்' - எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்த அதிபர் செலன்ஸ்கி

'உக்ரைனுக்கு கட்டாயம் வர வேண்டும்' - எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்த அதிபர் செலன்ஸ்கி
'உக்ரைனுக்கு கட்டாயம் வர வேண்டும்' - எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்த அதிபர் செலன்ஸ்கி

போர் முடிவடைந்த பின்னர் தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் 10-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. மேலும், அந்நாட்டின் பல பகுதிகளில் உள்ள இணைய சேவைகளையும் ரஷ்யா துண்டித்து விட்டதால் அரசு இயந்திரம், ராணுவம் உள்ளிட்ட துறைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு இணைய சேவையை உறுதி செய்யும் 'ஸ்டார்லிங்க்' என்ற செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளை வழங்குமாறு அதன் நிறுவனர் எலான் மஸ்கிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அண்மையில் கேட்டுக்கொண்டார். இதன்பேரில், 'ஸ்டார்லிங்க்' அமைப்புகளை உக்ரைனுக்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எலான் மஸ்க்கிடம் விளாடிமிர் செலன்ஸ்கி இன்று வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலமாக பேசினார். அப்போது எலான் மஸ்க் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, போர் முடிவடைந்த பின்னர், தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து செலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு உதவி செய்து வருவதற்காக எலான் மஸ்கக்கு நன்றி தெரிவித்தேன். ஸ்டார்லிங்க் அமைப்புகள் அடுத்த வாரம் உக்ரைன் வந்து சேர்ந்துவிடும். விண்வெளி திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். போருக்கு பிறகு இதுகுறித்து தெரிவிப்பேன்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com