உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நிறைவு; விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
உக்ரைனில் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸில் தொடங்கியது. கோமல் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்; ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை உக்ரைன் பிரதிநிதிகள் முன்வைத்தனர். நீண்டநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்துள்ளன. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இரு நாடுகளும் விரைவில் முடிவெடுக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.