ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் மீது கடுங்கோபத்தில் புடின் - காரணம் என்ன?

ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் மீது கடுங்கோபத்தில் புடின் - காரணம் என்ன?
ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் மீது கடுங்கோபத்தில் புடின் - காரணம் என்ன?

உக்ரைன் போரின் கள நிலவரம் குறித்து தனக்கு தவறான தகவல்களை அளித்து வந்த தனது ராணுவக் கமாண்டர்கள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யா படையெடுத்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. தங்கள் எச்சரிக்கையை மீறி ரஷ்யா போரில் ஈடுபட்டு வருவதால், அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. இதனால் ரஷ்ய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தெரிகிறது.

இதனிடையே, உக்ரைன் மீது படையெடுத்தால், இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அந்நாடு சரணடைந்து விடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நம்பினார். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்களால் நெருங்க முடியவில்லை. இது, விளாடிமிர் புடினை பெரிய அளவில் அதிருப்தி அடைய செய்துள்ளது.

மேலும், உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவத்தினர் தீவிரமாக சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான பல போர் விமானங்களும், நவீன பீரங்கிகளும் அழிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரஷ்ய ராணுவ வீரர்களால் முன்னேறி செல்ல முடியாத அளவுக்கு உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த பல நாட்களாக இந்தக் கள நிலவரம் குறித்த சரியான தகவலை விளாடிமிர் புடினிடம் ரஷ்ய ராணுவக் கமாண்டர்கள் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால் போர் வியூகத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக மாற்றி அமைக்காமல் புடின் இருந்து வந்துள்ளார். தற்போது தான், ரஷ்ய ராணுவம் சந்தித்து வரும் சேதங்கள் புடினுக்கு தெரியவந்துள்ளது.

அதேபோல, போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் பல அம்சங்களும் புடினுக்கு முறையாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்துள்ள விளாடிமிர் புடின், தனது ராணுவக் கமாண்டர்கள், உயரதிகாரிகள் சிலர் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புடின் நடவடிக்கை எடுப்பார் என ரஷ்ய உளவு வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com