ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது எளிதா? - உக்ரைன் போடும் திட்டம் பலிக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது எளிதா? - உக்ரைன் போடும் திட்டம் பலிக்குமா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது எளிதா? - உக்ரைன் போடும் திட்டம் பலிக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக வேண்டும் என்பதில் உக்ரைன் தீவிரமாக இருக்கிறது. இதனால் உக்ரைனுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு இணைவது அத்தனை எளிதா?... விரிவாக பார்க்கலாம்...

ரஷ்யா உடனான போர்ச்சூழலை பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற தங்களின் நீண்ட கால கனவை நிறைவேற்ற உக்ரைன் முயற்சி செய்து வருகிறது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது ஒரே நாளில் நடத்து விடும் நிகழ்வு அல்ல அது மிக சிக்கலான நடைமுறைகளை கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இது தவிர பல நாடுகள் ஒன்றியத்தில் இணைய வேண்டும் என விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடுகள் கட்டுப்பாடில்லா சந்தை பொருளாதாரத்தை கொண்டிருக்க வேண்டும், நிலையான ஜனநாயகம் கொண்ட நாடாக இருக்க வேண்டும், யூரோவை பயன்படுத்த வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சட்டத்திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த தகுதிகளை பூர்த்தி செய்யும் நாடுகள், ஐரோப்பிய கவுன்சிலிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஐரோப்பிய கவுன்சில் இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும். ஐரோப்பிய ஆணையம் விண்ணப்பம் மற்றும் தகுதிகளை ஆய்வு செய்து, விண்ணப்பத்தை ஏற்கலாமா வேண்டாமா என்ற பரிந்துரையை அளிக்கும். விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் விண்ணப்பித்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வரைவுகள் கொண்டு வரப்படும். இதன் பின்னர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் , தூதர்கள், விண்ணப்பம் செய்த நாட்டுடன் வணிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவர். இந்த பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அம்சமும் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்லும். இதற்கே ஐந்து வருடங்கள் வரை ஆகலாம். ஏற்கனவே அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, செர்பியா, துருக்கி உள்ளிட்டவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பம் செய்து நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கின்றன.

போலந்து நாடு 1994ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்து , 2004ஆம் ஆண்டு தான் முறைப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. உக்ரைன் தற்போதைக்கு விண்ணப்பதாரர் என்ற நிலையில் கூட இல்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வணிக உறவு கொண்ட நாடாக மட்டுமே உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராகும் பட்சத்தில், ரஷ்யாவை எதிர்கொள்ள மற்ற 27 நாடுகளிடம் இருந்து உடனடியாக ராணுவ உதவி கிடைக்கும். இது தவிர உக்ரைன் மக்கள் எளிதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கலாம் , குடிபெயரலாம், தொழில் புரியலாம். உக்ரைனுக்கான வணிக கதவுகள் விரிவடையும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அந்த நாட்டிற்கு பாதுகாப்பு கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com