மழைக் காலங்களில் மின்வாகனங்களை பராமரிப்பது எப்படி? நிபுணர்கள் தரும் பாதுகாப்பு ஆலோசனைகள்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சார வாகனங்கள் (EV) அதிகரித்துள்ளன. ஆனால் அவற்றின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இந்நிலையில், மழைக்காலத்தில் அவற்றை பாதுகாப்பது எப்படி? நிபுணர்கள் தரும் பாதுகாப்பு ஆலோசனைகள் என்னென்ன பார்க்கலாம்....
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு அதிகரித்துள்ளபோதிலும், அவற்றை முறையாகப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் தீ விபத்துகள் மற்றும் வாகனக் குறைபாடுகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, EV-இல் உள்ள மோட்டார், கன்ட்ரோலர், பேட்டரி, சார்ஜர் மற்றும் இணைப்பிகள் அனைத்தும், தூசு மற்றும் நீரிலிருந்து முழு பாதுகாப்பு, 1 மீட்டர் ஆழ நீரில் 30 நிமிடங்கள் தாங்கும் திறன் கொண்டதை குறிக்கும் IP 67 தரம் கொண்டதா என உறுதிசெய்து வாங்குவது அவசியம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
மேலும், வாகனத்தை இயக்கி வந்த பிறகு பேட்டரி சூடாக இருக்கும் என்பதால், உடனே சார்ஜ் செய்யாமல் ஒரு மணி நேரம் குளிர்வித்த பிறகே, கூரையின்கீழ் சார்ஜ் செய்ய வேண்டும். NMC பேட்டரிகளில் உள்ள கோபால்ட் காரணமாக வெடிக்கும் அபாயம் இருப்பதால், ஓவர் சார்ஜ் ஆவதைத் தவிர்க்க ஆட்டோ கட்ஆஃப் நுட்பம் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும். வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நாமே பிரிக்காமல், உரிய பயிற்சி பெற்ற மெக்கானிக்கிடம் மட்டுமே கொடுத்துச் சரிசெய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் போலவே EV வாகனங்களுக்கும் உள்ள நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

