மனிதர்கள் செல்ஃபோனுக்கு அடிமையாவது ஏன்?
செல்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மனிதர்கள் எளிதில் அடிமையாவதற்கு மூளையில் சுரக்கும் டோபமைன் ரசாயனமே முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான அல்லது புதிதான செயல்களைச் செய்யும்போது நமது மூளையில் உள்ள டோபமைன் ரசாயனம் சுரக்கிறது. பிறரிடம் பாராட்டு பெறுவது, அல்லது புதிய தகவலைக் காண்பது போன்ற செயல்களும் இதைத் தூண்டுகின்றன. அதனால்தான் மூளையில் இவ்வாறு டோபமைன் சுரக்கும் பகுதியை ‘பரிசுப் பகுதி’ என்று அழைக்கிறார்கள். ஒரே செயலில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதை விட, அவ்வப்போது புதிய, ஆர்வமூட்டும் விஷயத்தில் கவனத்தை திசை திருப்பினால் டோபமைன் சுரப்பு திடீரென அதிகரிக்கும். இந்த உச்ச நிலைக்குத்தான் மூளை ஏங்குகிறது. தொடர்ந்து இதைத் தேடுவதே 'சலிப்பு' என்று கருதப்படுகிறது.
செல்போன்களில் வரும் நோட்டிஃபிகேஷன் எனப்படும் அறிவிப்புகள், இணைப்புகள் மற்றும் 'லைக்' போன்ற பாராட்டுகள் ஆகியவை ஏதோ ஒரு புதிய விஷயம் கிடைக்கப்போகிறது என்று எண்ணி டோபமைனைச் சுரக்க வைக்கின்றன. இது 'புதுமை விரும்பும் பண்பு' என அழைக்கப்படுகிறது. காஃபி அல்லது சிகரெட்டைவிடப் பல மடங்கு அதிகமான, ஆயிரக்கணக்கான தூண்டுதல்கள் இணையத்தில் இருப்பதால், இந்த அடிமைத்தனம் நிறுத்த முடியாத சுழலாக மாறுகிறது. இதனால் தொடர்ச்சியாக ஒரே செயலைச் செய்யமுடியாமல், 'கவனச் சிதறலுக்கு அடிமையாதல்' என்ற பழக்கத்தை மூளை விரும்புகிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
