தக்காளி விலை ஏற்றமா? கவலை வேண்டாம்! வந்துவிட்டது 10 ரூபாய் Tomato Paste!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி விலை உயர்ந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில், தக்காளியின் விழுது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை நாம் கண்டுவருகிறோம். அந்த முன்னேற்றமென்பது, நம் சமையலறையைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படியான ஒரு முன்னேற்றமான (!) மாற்றத்தை பற்றி, இங்கே பார்ப்போம்!

நாள்தோறும் எழுந்தவுடன் நாம் உபயோகிக்கும் பல் துலக்கும் பிரஷில் தொடங்கி கைப்பேசி, கைப்பை என நாள் முழுக்க அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களிலும் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டன. இந்த புதுமை பொருட்களில் மட்டுமல்ல, சமையலிலும் வலம் வருகின்றன. உதாரணத்துக்கு முன்பெல்லாம் காய்கறி, இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றை அன்றைய தினம் அரைத்து உணவில் சேர்ப்பது வழக்கம். ஜீரகம், மிளகு போன்ற பொருட்களும் இதில் அடங்கும்.

ஆனால் காலப்போக்கில் அனைத்தும் 10 ரூபாய் பாக்கெட்டுகளில் அடங்கிவிட்டன. இதில் நாங்கள் மட்டும் விதி விலக்கல்ல என களத்திற்கு வந்துவிட்டது தக்காளி கூழ். அதாவது SAUCE, KETCHUP போல! தக்காளி ஜூஸ் கேள்வி பட்டிருப்போம்... அதென்ன தக்காளி கூழ் என்கின்றீர்களா? வேற ஒன்றும் இல்லை, தக்காளிகளை அரைத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதுதான் தக்காளி கூழாம். அதான்பா Tomato Paste!

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜீரகம், மிளகு உள்ளிட்டவற்றின் விலை இரு மடங்கு இப்போது உயர்ந்துவிட்டதால் கடைகளில் தூள் செய்து விற்கப்படும் ஜீரகம், மிளகை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர் பொதுமக்கள். அதுபோலவே, நாளுக்கு நாள் தக்காளி விலை 100 ரூபாய், 160 ரூபாய் என ஆப்பிளுக்கு சவால் விடும் வகையில் விற்பனையாவதால் தற்போது தக்காளி கூழ் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

5 முதல் 6 தக்காளி வரை போட வேண்டிய இடத்தில் 10 ரூபாய்க்கு தக்காளி கூழ் பாக்கெட்டை வாங்கி ஊற்றினால் சமையல் ரெடி. வெங்காயம் விலையும் அதிகரித்து வருவதால் இனி வரும் காலங்களில் வெங்காயமும் அரைத்து பாக்கெட்டுகளில் விற்கப்படும் என்றாலும் ஆச்சரியமில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com