செயலையே சொல்லாய்க் கொண்ட சிந்தனையாளர் - அ.மார்க்ஸ் 75

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் அ.மார்க்ஸுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு இருவருமே கம்யூனிசத் தலைவர்களின் பெயர் தாங்கியதால் பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.
அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்அ.மார்க்ஸ்

75 வயதை எட்டியிருக்கிறார் அ.மார்க்ஸ். இதைப்போல் ஒரு பிறந்தநாளையொட்டிய ஒரு நேர்காணலில், தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதன் ரகசியம் குறித்து சொல்லும்போது அ.மார்க்ஸ் இப்படி சொன்னார் - "நான் எப்போதும் இளைஞர்களுடன் இருக்கிறேன்". உண்மைதான். மார்க்ஸைச் சுற்றி எப்போதுமே ஓர் இளைஞர் கூட்டம் உண்டு. அதைத்தாண்டி இந்த வயதிலும் ஏதேனும் ஓர் உண்மையறியும் குழுவுக்காகவோ நூல் வெளியீட்டுவிழாவுக்காகவோ ஆர்ப்பாட்டங்களுக்காகவோ தமிழகத்தின் பல மூலைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் இளைஞர் அவர். வயது என்பது அ.மார்க்ஸைப் பொறுத்தவரை ஆண்டுகள் கடக்கும் அடையாளம் மட்டுமே.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் அ.மார்க்ஸுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு இருவருமே கம்யூனிசத் தலைவர்களின் பெயர் தாங்கியதால் பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்பட்டவர்கள். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கித் தூக்கிலிடப்பட்ட கணபதியின் தோழர், மார்க்ஸின் தந்தை அந்தோணிசாமி. இயல்பாகவே இடதுசாரி குடும்பத்தில் வளர்ந்த மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். ஒரு பேராசிரியராகத் தொடர்ந்து ஆசிரியர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் அவர். ஒருகட்டத்தில் சி.பி.எம்முக்கும் அவருக்குமிடையில் முரண்பாடு வந்து வெளியேறிய அ.மா, நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் யுத்தக்குழுவின் கலை இலக்கிய அமைப்பான புரட்சிகரப் பண்பாட்டுப்பேரவையில் இயங்கிவந்தார்.

1991ல் சோவியத் யூனியனின் உடைவு உலகம் முழுவதுமே கம்யூனிஸ்ட்கள் மத்தியில் மனச்சோர்வையும் பல கேள்விகளையும் எழுப்பியது. ரவிக்குமார், பொ.வேல்சாமி, பொதியவெற்பன் ஆகியோருடன் இணைந்து அ.மார்க்ஸ் நடத்திய 'நிறப்பிரிகை' இதழ் சோசலிசக் கட்டுமானம் குறித்த விவாதங்களை முன்னெடுத்தது. அ.மார்க்ஸின் 'மார்க்சியத்தின் பெயரால்' என்னும் நூலும் பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

A 2D map of the former Soviet republics after the split in 1991
A 2D map of the former Soviet republics after the split in 1991Dalle3

சோவியத் யூனியன் வீழ்ச்சி ஏன், சோசலிசக் கட்டுமானத்தில் கட்சியும் அரசும் இறுகிப்போனது சரியா, மேல்கட்டுமானம், அடிக்கட்டுமானம் குறித்த நிரந்தர வரையறை சாத்தியமா, வர்க்கத்தைத் தாண்டி சாதி, பால், தேசிய இனம் குறித்து கம்யூனிஸ்ட்கள் கவனம் குவிக்கவேண்டிய புள்ளிகள் ஆகியவை குறித்த அ.மார்க்ஸின் கருத்துகள் மார்க்சியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. 'அ,மார்க்ஸ் அல்ல அ-மார்க்ஸ்', 'கலைப்புவாதி' 'இயக்கங்களைப் பிளவுபடுத்த முயல்கிறார்' என்றெல்லாம் அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பின்நவீனத்துவம் குறித்த மார்க்சின் கருத்துகள் கடுமையாக எதிர்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று பல இடதுசாரி இயக்க மேடைகளில் மார்க்ஸ் கலந்துகொள்வதோடு அவர் முன்வைத்த விமர்சனங்களையும் ஏதோ ஒருவகையில் மார்க்சிய இயக்கங்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றன என்பதே எதார்த்தம்.

'எழுத்தாளரும் எழுத்தும் புனிதம்', 'அகதரிசனம், உள்ளொளி ஆகியவைதான் படைப்புக்கு அடிப்படை', 'இலக்கியத்தில் அரசியல் வந்தால் தீட்டு' என்று நிலவிவந்த சனாதன தமிழ் இலக்கியச் சூழல்வெளியில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தியவை அ.மார்க்சின் இலக்கிய விமர்சனங்கள். 'எல்லாமே பிரதிகள்தான். ஒரு பிரதி எழுதியவுடன் ஆசிரியரின் வேலை முடிகிறது. வாசகர்களே அர்த்தங்களை உருவாக்குகிறார்கள்.', 'உன்னத இலக்கியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது', 'அரசியலற்ற எழுத்து என்பது அபத்தம். படைப்பாளியின் சாதிய, வர்க்க, பால்நிலைச் சார்புகள் பிரதிகளில் எதிரொலிக்கின்றன' என்று புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து அ.மார்க்ஸ் முன்வைத்த விமர்சனங்கள் உள்ளொளி உன்னத எழுத்தாளர்களைக் கதறவும் பதறவும் வைத்தன.

இன்னொருபுறம் பார்ப்பன- வெள்ளாள ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த நவீன இலக்கிய வெளியில் ஏராளமான தலித், பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் பெண்களும் எழுத வந்ததற்கும் மார்க்சின் விமர்சன சிந்தனைகள் முக்கியமான காரணம். அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி அயல் மாநில தலித் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கும் தமிழில் தலித் இலக்கியங்கள் எழுதப்படுவதற்கும் உடலரசியலை முன்வைத்து பெண் இலக்கியங்கள் உருவானதற்கும் அ.மார்க்சும் ஒரு முக்கியமான வினையூக்கியாக இருந்தார்.

கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே சுருக்கி அறியப்பட்ட பெரியாரின் பல பரிமாணங்களை நவீனக் கோட்பாட்டுச் சிந்தனைகளின் அடிப்படையில் முன்வைத்தது அ.மார்க்சின் மிக முக்கியமான பங்களிப்பு. பெரியாரின் சிந்தனைகளில் இருந்த அரசவிழ்ப்பியக்கூறுகள், சுயேச்சை அறங்கள், தீவிரப்பெண்ணியம், உடலரசியல், அபிமான மறுப்பு போன்ற பல புள்ளிகளை முன்வைத்த அ.,மார்க்சின் 'பெரியார்?' நூலும் நிறப்பிரிகையின் பெரியாரியம் குறித்த கட்டுரைகளும் புதிய தாக்கங்களை ஏற்படுத்தின.

பெரியாரைத் தொடர்ந்து முன்வைத்த அ.மார்க்சுடனான தனிப்பட்ட பகை பெரியாரையே தலித் எதிரியாக சித்திரிக்கும் நிலைக்குச் சென்றபோது பெரியாரியக்கங்களுக்கும் முன்னால் பெரியார் குறித்த அவதூறுகளை முறியடிப்பதில் முன்நின்றவர் அ.மார்க்ஸ். அந்தவகையில் 'பெரியார் : தலித்துகள் முஸ்லீம்கள்' என்ற அவரது நூல் முக்கியமானது. பெரியார், திராவிட இயக்கம், இடதுசாரிகளைத் தலித்துகளின் எதிரியாக நிறுத்தும் முயற்சியைத் தொடங்கியவர்களே இன்று பெரியாரை நிராகரிக்க முடியாத சூழலை உருவாக்கியதில் அ.மார்க்சின் பங்கு முக்கியமானது.

அத்தகைய அவதூறுகளை முன்வைத்து மறுபுறம் பார்ப்பனர்களுடனும் இந்துத்துவத்துடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகோக்கும் விலகல்வாத தலித்தியத்தைப் போலவே ஆபத்தானது அருந்ததியர்கள் உள்ளிட்ட மக்களைப் புறந்தள்ளி சாதி அடிப்படையில் முன்வைக்கப்படும் தூய்மைவாத தமிழ்த்தேசியம்.இன்றைய சீமான் போன்ற இனவாதிகளுக்குக் கருத்தியல் அடித்தளம் அமைத்துக்கொடுத்த குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' நூல் வெளிவந்தபோதே கோ.கேசவனுடன் இணைந்து 'குணா : பாசிசத்தின் தமிழ் வடிவம்' என்ற முக்கியமான நூலை எழுதியவர் அ.மார்க்ஸ்.

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் அரசியல் எழுச்சி நிகழ்ந்தபோது தலித் அரசியல் அறிக்கையை உருவாக்கிய அ.மார்க்ஸ், பின்னாட்களில் விலகல்வாத தலித் எழுத்தாளர்களால் அவதூறு செய்யப்பட்டாலும் தொடர்ந்து தலித் மக்கள் பக்கம் நின்றவர். போபால் பிரகடனத்தை நூலாக வெளியிட்டதுடன் அதைக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சென்றார். இன்னொருபுறம் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் வளர்ந்த காலத்திலேயே அதை எதிர்க்கும் முக்கியமான வழிமுறைகளை உருவாக்கியவர் அ.மார்க்ஸ்.

அவரது 'முஸ்லீம்களுக்கு எதிரான கட்டுக்கதைகள்' நூல் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆயின. அது சிறுநூல்தான் என்றாலும் வாட்ஸ்-அப், சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து பொய்ச்செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பும் இந்துத்துவச் சதியை முறியடிப்பதற்கு இன்றளவும் முக்கியமான கருத்தியல் ஆயுதம். 'இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு', 'ஆட்சியில் இந்துத்துவம்', 'ஆரியக்கூத்து' போன்ற அ.மார்கசின் நூல்கள் இந்துத்துவத்துக்கு எதிரான களப்போராளிகளின் கைவாட்கள்.
வெறுமனே எழுதியதுடன் மட்டும் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. தலித்துகளும் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டபோது முற்போக்கு இயக்கங்கள் நடத்திய கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்ட மார்க்ஸ், மனித உரிமைகள் தளத்தில் ஆற்றிய பங்கு அளப்பரியது. மனித உரிமை செயற்பாட்டாளராக மார்க்ஸ் நடத்திய கள ஆய்வுகளும் உண்மை அறியும் குழுக்களின் ஆய்வுகளும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி பெறுவதற்குத் துணைநின்றன. தன் கருத்தியல் சார்புகளுக்கு அப்பால் களத்தில் நிலவிய எதார்த்தத்தைப் பிரதிபலித்தது அ.மார்க்சின் அறம் சார்ந்த நடவடிக்கைகள்.

இன்று மதவாதிகளின் எரிச்சலுக்குரியவர்களாக இருப்பவர்கள் காந்தியும் நேருவும். பெரியாரிய. மார்க்சியப் பார்வையில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இவ்விருவரையும் அவர்களின் சாதகங்களுடன் பேச வேண்டிய அவசியமிருக்கிறது. அந்தவகையில் நேருவின் மதச்சார்பின்மை, காந்தியின் அறம்சார்ந்த செயற்பாடுகள், எல்லோரையும் உள்ளடக்கும் காந்தியின் தேசியம், சனாதனத்துக்கு எதிரான காந்தியின் அரசியல் ஆகியவை குறித்து தமிழ்ச்சூழலில் தொடர்ந்து பேசிவருகிறார் அ.மார்க்ஸ்.

மார்க்சிய, பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய இயக்கங்களின் செயற்பாடுகளுக்குத் தமிழ்நாட்டில் நூற்றாண்டுக்கால வரலாறு உண்டு. ஆனால் அந்த இயக்கங்களாலும் கவனத்திலெடுக்கப்படாத திருநங்கைகள், தன்பால் சேர்க்கையாளர்கள் போன்றவர்களின் உரிமைகளைப் பேசியதிலும் விளிம்புநிலை ஆய்வுகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியதிலும் அ.மார்க்சின் பங்கு மகத்தானது.

அ.மார்க்ஸ் தொடக்கத்தில் சிறுபத்திரிகை தளத்தில் மிகச்சிறிய வட்டத்தில் இயங்கிவந்தவர்தான். ஆனால் தமிழ்ப்பொதுவெளியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் அதில் அ.மார்க்சின் தாக்கங்களையும் பங்களிப்பையும் தொகுத்துப்பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

யதார்த்தவாதத்துக்கு மாற்றாக மேஜிக்கல் ரியலிசம் போன்ற பல்வேறு எழுத்துமுறைகளை முன்வைத்து எழுதுவதை வலியுறுத்தியவர் அ.மார்க்ஸ். அந்தக்காலகட்டத்தில் அத்தகைய முயற்சிகள் நடைபெற்றாலும் இப்போது தமிழ் இலக்கியம் மறுபடி எதார்த்தவாதத்துக்குள்ளேயே முடங்கிவிட்டது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவோ நான் லீனியர் கதைசொல்லல், கதையற்ற கதை, மையங்களைத் தகர்க்கும் பல்வேறு கதைசொல்லல்கள், மேஜிக்ல் ரியலிசம், டார்க் ஹியூமர் ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்ப்பதுடன் வணிக வெற்றியும் அடைவது அ.மார்க்சுக்குக் கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்.

தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை உறுதி செய்ததிலும் இந்துத்துவ எதிர்ப்புக்கான பரந்துபட்ட தளங்களை உருவாக்கியதிலும் அ.மார்க்சின் கணிசமான பங்களிப்பு இருக்கிறது. இன்று திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகளைப் பல்வேறு தரப்பினரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கான தொடக்கப்புள்ளி அ.மார்க்ஸ்.

அ.மார்க்சின் செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா என்று சிந்தித்தால் ஏமாற்றமே மிஞ்சும். விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர்கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், ஆனந்த விகடன், ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆகியவை அவருக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன என்றாலும் மார்க்சின் செயல்பாடுகளுக்கு முன்னால் அவை மீச்சிறுதுளியே. சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் வரும்போதெல்லாம் படைப்பாளிகள், விருதுகள் குறித்த சர்ச்சைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் அ.மார்க்ஸ் போன்ற அ-புனைவு கோட்பாட்டு விமர்சகர்களை எழுத்தாளர்களாக அங்கீகரித்து சாகித்ய அகாடமி முதல் எந்த இலக்கிய அமைப்பும் விருதுகள் வழங்குவதில்லை. ஆனால் சில நோய்மை எழுத்தாளர்களைப்போல் 'எழுத்தாளர்களைத் தமிழ்ச்சமூகம் மதிப்பதில்லை; என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை' என்று வெற்றுப்புலம்பல்களை முன்வைப்பவரல்ல அ.மார்க்ஸ். புகழுரைகளும் விருதுகளும் அவருக்குப் பொருட்டேயல்ல.

மார்க்சியம், பின்நவீனத்துவம், ஈழம், காந்தி, நபிகள், பௌத்தம் போன்றவை குறித்த அ.மார்க்சின் கருத்துகள் குறித்து பலரும் முரண்பட்டு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். ஒருவர் விமர்சிக்கப்படுகிறார் என்றால் தொடர்ந்து இயங்குகிறார் என்றே அர்த்தம். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால், ஓர் எழுத்தாளர் நவீனச்சிந்தனைகளை முன்வைத்து இலக்கியப்பிரதிகளை அணுகும் விமர்சகராகவும் 'அதிகாரத்துக்கு எதிராக உண்மைகளைப் பேசும்' சிந்தனையாளராகவும் 'செயல் அதுவே சிறந்த சொல்' எனக் கருதும் களச்செயற்பாட்டாளராகவும் இருக்க முடியும் என்பதற்கு கண்முன் வாழும் கருத்தியல் சாட்சி அ.மார்க்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com