\
makzim gorki
makzim gorki pt web

அடிமை இருளைக் கிழித்த தாயின் நெருப்பு..

உலக இலக்கிய வரலாற்றில் ஒரு நாவல் புரட்சிக்கு வித்திட்டது என்றால், அதில் முதன்மையானது ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலாகத்தான் இருக்கும்.
Published on: 

- கார்த்திகா செல்வன்

உலக இலக்கிய வரலாற்றில் ஒரு நாவல் புரட்சிக்கு வித்திட்டது என்றால், அதில் முதன்மையானது ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலாகத்தான் இருக்கும். ஒரு சாதாரணத் தாயின் அன்பு, எப்படி ஒட்டுமொத்த சமூகத்துக்குமான விடுதலைக் குரலாக மாறியது என்பதை இந்த சுருக்கமான செய்தியில் பார்க்கலாம்.

தாய் நாவல்
தாய் நாவல்

கதையின் தாய் பெலகேயா நிலோவ்னா (Pelageya Nilovna) வறுமையிலும், கணவனின் கொடுமையிலும் உழன்று தவிக்கும் சாதாரண பெண். கணவரின் மறைவுக்கு பிறகு, பெலகேயாவின் ஒரே மகன் பாவெல் (Pavel), தொழிற்சாலை வேலைக்கு செல்கிறார். அங்கு தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து, பின் அவர்களுடனே ஒன்றிவிடுகிறார். தனிமரமாய் நிற்கும் தாய்க்கு மகனின் செயல்பாடுகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. தன் மகன் சிறைக்கு சென்ற பிறகுதான், அவன் படும் துன்பங்கள் யாருக்காக, அதன் எதிர்கால பலன் என்ன என்பதை அறிந்து, மகனின் லட்சியத்தைத் தன் தோள் மீது சுமக்கத் தொடங்குகிறார் பெலகேயா. எழுதப் படிக்க தெரியாத, வெளிமனிதர்களை கண்டாலே தயங்கிக் கதவுக்குப் பின் மறைந்து நிற்கும் அந்த தாய், எப்படி தன் மகனின் உயர்ந்த லட்சியத்துக்காகக் களமிறங்கி, பல இளைஞர்களை வழிநடத்தி செல்கிறார் என்பதுதான் இந்த நாவல்.

எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, தொழிலாளர்களின் கசந்த வாழ்வின் போராட்டத்தைக் காட்டாறு போல பதிவு செய்திருப்பார். அவரது இயற்பெயர் அலெக்ஸி மாக்ஸிமோவிச் பெஷ்கொவ். ஆனால், அவரது வாழ்வின் துயரங்களையும் அந்தக் கால ரஷ்ய சமூகத்தின் கசப்பான யதார்த்தங்களையும் பதிவு செய்யும் நோக்கோடு தனக்கு தானே ரஷ்ய மொழியில் கசப்பு என பொருள்படும் கார்கி (Gorki) என்ற பெயரை இணைத்துகொண்டார். பயண விரும்பி, நல்ல சமையல் கலைஞர், ரஷ்யப் புரட்சிக்காக எழுதுவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி நிதி திரட்டியவர்.

Maxim Gorky
Maxim Gorky

ரஷ்யப் புரட்சியின் போது பல லட்சம் தொழிலாளர்கள் இளைஞர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்திய தாய் நாவலின் முதல் பதிப்பு ரஷ்ய மொழியில் வெளியாகவில்லை. ஜார் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 1906ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆப்பிள்டன்ஸ் இதழில் ஆங்கில மொழிப்பெயர்ப்பாகவே முதலில் வெளியானது. அதன் பிறகும் ஜார் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பே 1907இல் வெளியானது. ரஷ்யப் புரட்சிக்கு பிறகு 1917இல்தான் மாக்ஸிம் கார்கியின் தாய் நாவலின் முழு பதிப்பும் மக்கள் கரங்களுக்கு வந்தது.

இலக்கிய வரலாற்றில் இப்படி பல தணிக்கைகளுக்கு பிறகு வெளிவந்து, பல கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்த புத்தகமாகவும் தாய் இருக்கிறது. இதனை தமிழில் தொ.மு.சி.ரகுநாதன் மொழிப்பெயர்த்துள்ளார். 1926இல் இந்த நாவல் தாய் என்ற பெயரிலேயே மெளன படமாக திரைக்கு வந்தது. காலங்கள் கடந்தாலும் அடக்குமுறைக்கு எதிரான எளிய மக்களின் குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் இந்த ‘தாய்’ இருந்துகொண்டேதான் இருப்பாள்.