“வரலாற்றின் மனித வாழ்க்கை அன்றாடங்களால் நிரம்பியது” ~ ஈரா முக்ஹோட்டி
ஈரா முக்ஹோட்டி, இந்திய வரலாறு மற்றும் புராணக்கதைகளில் உள்ளவர்களைக் குறித்த சுவாரஸ்யமான நூல்களை எழுதிவருபவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்றவர். The Lion and The Lily: The Rise and Fall of Awadh, Akbar: The Great Mughal, Daughters of the Sun: Empresses, Queens and Begums of the Mughal Empire, Heroines: Powerful Indian Women of Myth & History ஆகியவை அல்புனைவு நூல்களையும், Song of Draupadi: A Novel என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவிற்காக, அவருடன் நடந்த இணைய வழி நேர்காணலின் சுருக்கம் இங்கே
அடிப்படையில் நீங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்றவர். ஆனால் ஓர் எழுத்தாளராக, நீங்கள் வரலாறு, புராணக்கதைகள் சார்ந்த தலைப்புகளில் எழுதி வருகிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?
எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அவர்களுக்கு எழுச்சியூட்டும் பெண்கள் குறித்த கதைகளை நான் தேடிப்பார்த்தேன். ஆனால் அத்தகைய கதைகள் யாவும் மேற்குலகு சார்ந்த பின்னணி கொண்டவையாக இருந்தன. எனவே, நான் அதைப்போன்ற பெண்களைக் குறித்த கதைகள் இந்தியப் பின்னணியில் இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன். ஆனால், அத்தகைய கதைகள் யாவும், பெண்களை எழுச்சியூட்டும் விதமாகச் சித்தரிக்கப்படாமல் இருந்தன. நமது வரலாற்றில், புராணங்களில் உள்ள பெண்கள் அனைவரும், ஆண்-மைய, ஆணாதிக்கப் பார்வையிலிருந்தே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தட்டையான, ஒரே மாதிரியான குணாதிசயங்கள் கொண்ட, பெரிதும் சுவாரஸ்யங்கள் அற்ற கதாபாத்திரங்களாகவே அவர்கள் எழுதப்பட்டிருக்கிறார்கள் - எவ்வித குறையும் அற்ற ஒரு சிறந்த மனைவியாக, மகளாக, சகோதரியாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தப் பாத்திர வார்ப்புகள் எப்படி 21ம் நூற்றாண்டுப் பெண்களுக்குப் பொருந்திப் போகும்? ஆணாதிக்கச் சிந்தனைகள் புதிய, ஆழமான வகைகளில் வேர்விட்டு வளரும் இந்தக் காலகட்டத்தில், நாம் பழைய பார்வைகளையே மீண்டும் முன்னிறுத்துகிறோமா, அல்லது, புதிய சிந்தனைகளை இங்கு வளர்க்கிறோமா என்று யோசித்துப்பார்த்தேன். மிகவும் தனிப்பட்ட அளவில், என் பிள்ளைகளுக்காகத் தேடத் தொடங்கினேன் - அது விரிவடைந்துகொண்டே சென்றது. பெண்களின் வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கண்டறியத் தொடங்கியபோது, இந்தத் தேடல் மேலும் விரிவடைந்தது. அப்போதுதான், என் குடும்பத்துக்காக மட்டும் நான் எழுதும் கதைகளாக இல்லாமல், இது ஒரு புத்தகமாக உருமாறலாம் என்ற எண்ணம் அப்போது உதித்தது. பெண் கதாபாத்திரங்கள் எவ்வாறு உயர்சாதிப் பார்வையிலிருந்து அணுகப்பட்டிருக்கிறது போன்றவற்றை முதலில் ஆராய்ச்சி செய்தேன். எனது அறிவியல் பின்புலம் பெரிதும் உதவிகரமாக இருந்ததும் இந்த இடத்தில்தான். ஓர் ஆராய்ச்சியை எவ்வாறு அணுகவேண்டும், எனக்கு இருக்கும் தரவுகளை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் போன்றவை எனக்கு முன்பே தெரிந்திருந்ததால், அதனை அடிப்படையாகக் கொண்டு என்னுடைய எழுத்தைத் தொடங்கினேன். அவ்வாறுதான் எனக்கு முகலாயர்கள் குறித்த ஆர்வம் உதித்தது. வரலாற்றுக் காலவோட்டத்தில் அவர்கள் வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இங்குதான் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் குறித்த பல்வேறு தரவுகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் அத்தகைய தரவுகள் யாவும் ஒரு காலனிய மனப்பான்மையிலிருந்தே அணுகப்பட்டிருக்கின்றன. எனவே, வரலாறு சார்ந்த பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்கவேண்டி இருந்தது. வாசிக்க வாசிக்க, என்னால் வரலாறு குறித்த சுவாரஸ்யமான கதைகளைக் கூற முடிந்தது. ஆனால், வரலாற்றில் பெண்களின் இடம் மட்டும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்க்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள்கூட, ஏன் இப்படிப்பட்ட புத்தகத்தை எழுதுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். அவர்கள் யாரும் சுற்றியுள்ள ஆதாரங்களைத் திரட்டவோ, அல்லது கிடைத்த தரவுகளை வைத்து, முகலாயர்கள் காலத்துப் பெண்கள் எப்படி இருந்தார்கள் என்று எழுதத் தயாராக இல்லை. ரூபி லால் மட்டுமே தொடக்ககால முகலாய பெண்களின் வாழ்க்கை குறித்து எழுதினார். இந்தப் பொருண்மை குறித்து யாரும் பெரிதாக எழுதாதபோது, நான் ஏன் எழுதக்கூடாது என்று யோசித்தேன்? வரலாற்றிலிருந்து பெண்களின் குரலை மீட்டுக் கொண்டுவருவதே என் நோக்கமாக இருந்தது. இதுவரை ஐந்து புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.
Good Night Stories For Rebel Girls என்ற நூல், ஒரு நாளுக்கு ஒரு கதை என்ற வகையில் 365 கதைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு நூல். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பெண்களை அறிமுகம் செய்யும் நூலாக இருக்கிறது. இதைப்போன்ற களத்தில், குழந்தைகளுக்காக இந்திய பெண்களை அறிமுகம் செய்யும் நூல் இங்கு சாத்தியமா?
நீங்கள் முன்வைத்திருப்பது மிகவும் பயனுள்ள கருத்து. ஏனெனில், பெண்கள் இதுவரை வரலாற்றில் பெரிதாகப் பதிவுசெய்யப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக இதுதான் நிலை. இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளாவிய அளவில் இதுதான் நிலை. பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் பெண்களுடைய பங்கு பீகாக் குறைவாகவே உள்ளது. இதற்கு அர்த்தம் பெண்கள் பெரிதாகச் சாதிக்கவில்லை என்பது அல்ல; அவர்களுடைய சாதனைகள் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை, அல்லது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை என்பதே ஆகும். இந்திய அளவில் சாதிய-ஆணாதிக்க மனநிலைக்கு எதிராக வாழும் அனைத்துப் பெண்களும் rebel girls என்றே நான் கருதுகிறேன். நம்மைச்சுற்றி, நம் கண்களுக்கு எதிரே நடக்கும் நிகழ்வுகள்தாம் நமக்கு எழுச்சியூட்டுகின்றன. அதிகார மையங்களில், அரசியலில், கல்வியில் நாம் பெண்களின் பங்களிப்பை நேரடியாகக் காணும்போது, நமக்கு ஓர் உத்வேகம் பிறக்கிறது. அப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் இல்லாதபோது, நமக்கு அத்தகைய விஷயங்களை நோக்கிக் கனவு காண்பது கடினமாகிறது. Rebel Girls போன்ற புத்தகங்களின் தேவை என்பதும் அதுதான் என்று நினைக்கிறேன்.
அண்மையில் நடந்த ஓர் இலக்கிய விழாவில், உங்கள் எழுத்துப்பணி குறித்து நீங்கள் குறிப்பிடும்போது, granular (நுணுக்கமான செறிவு நிரம்பிய என்று பொருள் கொள்ளலாம்) என்று குறிப்பிட்டீர்கள். அதுகுறித்து விவரிக்க இயலுமா?
நமது பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் வரலாற்றுப் பாடங்கள் மேம்போக்காகவே இருக்கின்றன. தேதிகள், போர்கள், அவற்றின் தொடர்ச்சி போன்றவற்றோடு அவை நின்றுவிடுகின்றன. ஓர் ஆட்சியாளர், அவருடைய நிலம், அவருடைய தலைமுறை போன்றவைதாம் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் மனித வாழ்வு என்பது அப்படி இல்லையே! நம்முடைய வாழ்க்கை என்பது பேரிடர்களால் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒன்று அல்லவே? வரலாற்றின் மனித வாழ்க்கை என்பது அன்றாடங்களால் நிரம்பியது. சமூகம், கலாச்சாரம் என்ற அனைத்திலும் இருக்கும் அன்றாடத்தின் விவரணைகள் எழுத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைத்தேன். அத்தகைய அன்றாடத்தின் விவரணைகள் மூலம் என்னால் பெண்கள் குறித்து எழுத முடிந்தது. வரலாற்றின் பேரிடர்களில், போர்களில் பெண்களைக் காணுவது அரிது. ஆனால், வரலாற்றின் அன்றாடங்களில் பெண்களைக் காண்பது எளிது.
வரலாற்றில் பெண்களை நோக்கிப் பயணிப்பதன்மூலம், ஒரு சமூகத்தின் தசைகளைக் கடந்து அதன் எலும்புகள் வெளிப்படும். அந்த எலும்புகளில்தான் நான் பெண்களைக் கண்டடைகிறேன். நான் மிக விரிவான காலகட்டம் குறித்து எழுதுவதில்லை. மிகக் குறுகிய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு, அதில ஆழமாகவே எனது எழுத்து பயணிக்கிறது; என்னுடைய ஆராய்ச்சி முறையும் அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் புவியியல், மானுடவியல், கட்டிடடக்கலை போன்றவற்றை மட்டும் அல்லாமல், அந்தக் காலத்தின் பூந்தோட்டங்கள் எப்படி இருந்தன என்பதைக்கூட நான் ஆராய்ச்சி செய்ய முற்படுவேன்.
நவாப்கள் தோட்டங்களை நான் விவரிக்கும்போது, என்னுடைய வாசகர்கள் அதனை உணர வேண்டும். இத்தகைய வாசனைகளை நான் நுணுக்கமாகப் படம் பிடிக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்தத் தோட்டங்களில் இருக்கும் மல்லிகை மலர்கள் நமக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும் அதே நேரம், பிரிட்டிஷாருக்கு அது மிகுந்த வீரியமான ஒரு மணமாக இருக்கலாம். அப்போது அவர்கள் அந்தத் தோட்டத்தைப் பார்க்கும் பார்வை மாறுபடுகிறது. அவர்களுக்கு அந்த இடம் அதீதத்தின் இடமாகத் தோன்றுகிறது. இத்தகைய பார்வை மாறுபாடுகளை என்னுடைய எழுத்தில் நான் பத்தி வச்செய்ய விரும்புகிறேன். நவாப்களின் ஆடைகள், பெண்களின் ஆடைகள் - அவற்றின் தோற்றம், வளர்ச்சி, ஆடைத் தயாரிப்புத் தொழிலின் வரலாறு, வளர்ச்சி, உணவுப்பழக்கம், உருது மொழியின் உருமாற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் நான் எழுத்தில் கொண்டுவர முயலுவேன்.
ஆனால் அதே நேரம், என் வாசகர்களுக்கு இத்தகைய விவரணைகள் பாடம் படிப்பதைப்போன்ற உணர்வை அளிக்கக்கூடாது. அவர்கள் என் எழுத்தை வாசிக்கும்போது, எழுத்தின்போக்கில் இயல்பாக அவர்கள் இத்தகைய செய்திகளைக் கண்டடைய வேண்டும்.
நீங்கள் வரலாறு சார்ந்த புதினங்களை எழுதுகிறீர்கள். அதே சமயம், Song Of Draupadi போன்ற புராணக்கதைகள் சார்ந்தும் எழுதுகிறீர்கள். இரண்டு வெவ்வேறு எழுத்து வகைமைகளை அணுகுவதன் சவால்களாக நீங்கள் நினைப்பது என்ன?
Song of Draupadi என்னுடைய நூல்களில் நான்காவதாகப் பதிப்பிக்கப்பட்டாலும், நான் முதலில் எழுதி முடித்த புத்தகம் அதுதான். நான் அதனை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவில் புராணத்திற்கும் வரலாற்றிற்கும் இடையே உள்ள மயக்கத்தையும், உண்மையான வரலாறு மறக்கப்படுவதையும் எண்ணிப்பார்த்துக்கொண்டேன். நிஜ வரலாற்றில் வாழ்ந்த ராணி லட்சுமி பாய், பேகம் ஹஸரத் மஹால், மீராபாய் போன்றவர்கள் நம் மனங்களில் கிட்டத்தட்ட இதிகாச நாயகிகளாக, தெய்வங்களாக உருவகிக்கப்படுகிறார்கள். அதே நேரம், புராணக் கதைகளில் வரும் சீதா போன்ற கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையும் கொண்ட பெண்ணாக உருவகிக்கப்படுகிறார்கள். வரலாற்றில் தடம் பதித்த பெண்களை மறந்து, சீதா போன்ற புராண நாயகிகளின் நம்ப முடியாத குணாதிசயங்களை ஏன் முன்மாதிரியாக நிறுத்துகிறார்கள் என்று நான் எண்ணிப்பார்த்தேன். எனவே, மகாபாரதக் கதைகளில் வரும் திரௌபதி எனும் கதாபாத்திரம் மட்டும் அல்லாமல், மேலும் ஏழு, எட்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் குறித்து நான் எழுதினேன். இதுவரை அவர்கள் குறித்து வெளிவந்த கதைகளில் அவர்கள் ஒற்றைத்தன்மையோடு மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் மனிதத்தன்மை, உளச்சிக்கல்கள், அவர்களைத் துரத்தும் கேள்விகள் என்று அனைத்தையும் எழுத்தில் கொண்டுவர விருப்பப்பட்டேன். நான் புராணங்களைப்பற்றிப் பேச விரும்பவில்லை; மாறாக, அவற்றைக் கேள்வி கேட்கவே விரும்பினேன். அதனால்தான் அது என்னுடைய முதல் நூலாக அமைந்தது. அதன் பிறகு நான் வரலாறு சார்ந்த நூல்களையே எழுதி வருகிறேன்.
உங்களுடைய எழுத்து, தீவிரமான வரலாற்று ஆராய்ச்சி சார்ந்து இயங்குகிறது. இதுவரை கிடைத்துள்ள மானுடவியல் சார்ந்த தரவுகளையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இவை மட்டும் அல்லாமல், வாசனை, தொடுகை போன்ற புலன் உணர்ச்சிகளும் உங்கள் எழுத்தில் நிரம்பியுள்ளது. இத்தகைய எழுத்தை, அறிமுக நிலையில் உள்ள வாசகர்களுக்காக நீங்கள் எப்படிப் பொருத்தி எழுதுகிறீர்கள்?
நல்ல கேள்வி. அதை எனது எழுத்தின் சவாலாகவே கருதுகிறேன். இசை ஆராய்ச்சியாளர் கேத்தரின் ஸ்காஃபீல்ட் ஒருமுறை பேசும்போது, முகலாய காலத்தின் இசை குறித்து நான் நிறைய எழுதவில்லை என்று குறிப்பிட்டார். எனவே, நான் முகலாயர்கள் சார்ந்த இசையைக் கேட்கத் தொடங்கினேன். எழுதும்போது அந்த இசை எனக்குத் துணையாக இருந்தது. எனக்கு அது அந்தக் காலகட்டத்தை நினைத்துப் பார்க்க, உருவகிக்க வசதியாக இருந்தது. வாசமும் அப்படித்தான். அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நான் பயன்படுத்தும்போது, ஒரு நாள் முழுக்க அதன் வாசம் சருமத்தில் இருக்கும். இது போன்ற புலன் உணர்வுகளோடு நான் நாள் முழுக்கப் பயணிப்பது, என் எழுத்தில் அதனைப் பிரதிபலிக்க உதவும்.
கல்வி சார்ந்த வாசிப்பாக, அல்லது தீவிர வாசிப்பாளர்கள் அல்லாத, மற்ற சராசரி வாசகர்களுக்கு ஏற்ற வகையில் என் எழுத்து இருக்க வேண்டும் என்றால் - அது அவர்களைச் சமூக மற்றும் காட்சி ஊடகங்களிலிருந்து விலக்கி என் எழுத்தை நோக்கி அவர்களை வரவைக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு என் எழுத்தில் நான் ஒரு முழு உலகத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்த உலகத்தில் ஓர் ஆழமான அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அவர்களை உள்ளே இழுக்கும்படி சுவாரஸ்யமான தகவல்கள் வேண்டும். இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன: குறைவான தகவல்கள் எழுத்தை வறட்சியான ஒன்றாக மாற்றிவிடும். மிகுதியான தகவல்கள் வாசகர்களை அலைக்கழிக்கும்.
நிறைய தகவல்களைத் தரவுகளாகக் கொண்டதாக உங்களுடைய எழுத்துமுறை இருக்கிறது. உங்கள் நூலைத் தொகுத்துத் திருத்தும் முறை எப்படி இருக்கிறது? உங்கள் பதிப்பாசிரியர்கள் இந்த நடைமுறையில் எத்தகைய பங்கு வகிக்கிறார்கள்?
முன்பைவிடத் தற்போது நூலைத் தொகுக்கும் முறை எளிதாகக் கைக்கூடி வருகிறது. ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய பதிப்பாசிரியர்கள் எந்தத் தகவலை எடுத்துக்கொள்வார்கள், எதனை விடுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்க முடியும். எனவே, என்னுடைய எழுத்துமுறை என்பது முதலில் வாசிப்பில் தொடங்கும். தேவைப்படும் அனைத்துப் பொருண்மைகள் குறித்தும் நான் முதலில் வாசித்துவிடுவேன். அதன்பிறகு, எழுத்தின் போக்கையும் நான் முன்பே தீர்மானித்துவிட்டுதான் எழுதத்தொடங்குவேன். நான் கிளைத்தலைப்புகளில் தேவையற்ற நேரத்தைச் செலவு செய்வது இதனால் குறையும். பெண்களை முன்னிறுத்திய, காலனிய பார்வையிலிருந்து மாறுபட்ட ஒரு பார்வையில் நான் வரலாற்றை நான் அணுகவே முற்படுவதால் அதனையும் நான் கவனத்தில் கொள்வேன். கிளைக்கதைகளை நான் எவ்வளவு ரசித்து எழுதினாலும், மையச்சரடுக்கு அது ஒவ்வாது என்றால் நான் அதனை நீக்கி விடுவேன். எனவே, என் படைப்பை நான் பதிப்பாசிரியரிடம் அனுப்பும்போது அவர்களுக்கு மிகக் குறைவான வேலையே இருக்கும்.
நீங்கள் புராணக்கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஒற்றைத் தன்மை கொண்டவையாகக் (unidimensional) கட்டமைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டீர்கள். உங்களுடைய எழுத்தில் பெண்களை ஆழமாக, விரிவாகச் சித்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டர்கள். வரலாற்றில், புராணக்கதைகளில் வரும் பெண்களையும், நம் சமூகத்தில் வாழும் பெண்களையும் நீங்கள் எவ்வாறு பொருத்தப் பார்க்கிறீர்கள்?
என் பிள்ளைகள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது, நான் அவர்களை ராமாயண நாடகத்திற்கு அழைத்துச் செல்வேன். அத்தகைய நாடகங்களில் ராமரும் சீதையும் அயோத்திக்குத் திரும்புவதோடு நாடகம் முடிந்துவிடும். ஆனால், புராணக்கதையின்படி, சீதை காட்டிற்கு அனுப்பப்டுகிறாள். அங்குதான் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுக்கிறாள். எவ்வித தவறும் செய்யாத ஒரு நபராக ஏன் நம்முடைய புராணக் கதைகளின் நாயகிகள் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்? ஒரு மிகச் சிறந்த மனைவாக, மகளாக இருக்கிறாள். தன கணவனுக்காகக் காட்டிற்குச் செல்கிறாள். அனைத்துத் தியாகங்களையும் மேற்கொள்கிறாள். அவள் கற்பைப் பாதுகாப்பது மிக முக்கியமான ஒரு குணமாக இந்தக் கதைகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. புராணக்கதைகளில் காட்சிப்படுத்தப்படும் பெண்களைத் தற்காலத் தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் ஒற்றைத்தன்மை கொண்டவர்களாகவே காட்சிப்படுத்துகிறார்கள். உயர்சாதியைச் சேர்ந்த, நிறைய நகைகளை அணிகிற, மிகவும் பணிவான பெண்களாகவே காட்சிப்படுத்தப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மகாபாரதத்தில் வரும் திரௌபதி கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், தொலைக்காட்சியில் அவர் வெண்ணிற தோல் கொண்டவராகக் காட்சிப்படுத்தப்படுகிறார். ஆனால், மகாபாரதக் கதைப்படி, திரௌபதி கரிய நிறம் கொண்டவர். பன்னிரண்டு ஆண்டுகளாகத் தன் தலைமுடியைப் பின்னாமல் விரித்துப் போட்டிருப்பவர். தன்னுடைய கணவரான யுதிஷ்டிரரைக் கேள்வி கேட்கும் ஒருவராகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே, எத்தகைய காட்சிப்படுதலைத் தற்காலப் பெண்கள் கதைகள் வழியாக, தொலைகாட்சித் தொடர்கள் வழியாக உள்வாங்குகிறார்கள் என்பதை நாம் இங்கு உள்வாங்க வேண்டும். இதைத்தான் நான் ஒற்றைத்தன்மை கொண்ட கதாபாத்திரச் சித்தரிப்பு என்று கூறுகிறேன்.
The Lion and The Lily: The Rise and Fall of Awadh நூலை எழுதும்போது, பல்வேறு தரவுகள் காலனிய பார்வையிலிருந்து எழுதப்பட்டவையாக இருக்கும். நீங்கள் எழுதும்போது இத்தகைய சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
இதில் எனக்கு இரண்டு சவால்கள் இருந்தன: முதலில், கிடைத்த தரவுகள் பிரிட்டிஷாரின் பார்வையிலிருந்து எழுதப்பட்டவையாக இருந்தன. இரண்டு, நவாப்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட தரவுகள் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டன. அல்லது அவர்களுடைய நூல்கள் இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. எடுத்துக்காட்டாக, household expenses குறைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷார் நவாபுகளுக்குக் கட்டளையிட்டால், அதன் பொருள், போர் மற்றும் ராணுவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு, நவாப்கள் கலையை முன்னிறுத்தித் தமது அரண்மனையில் இருக்கும் இசைக்கலைஞர்கள், நாட்டியக்கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோரை ஆதரிக்கக்கூடாது என்பதாகும். நவாப்களுக்கு நூலகங்கள் மேல் மிகப்பெரிய பற்று இருந்தது. இதன்மூலம் மறைமுகமாக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது நமக்குத் தெரிகிறது
எனக்கு உதவிகரமாக இருந்தது, பிரெஞ்சு மொழித் தரவுகள். ஏனெனில், பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சு மொழிக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் சிக்கலான உறவு இருந்து வந்ததால், பிரெஞ்சுக்காரர்கள் இங்கு திப்பு சுல்தான் போன்ற அரசர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். இது முழுதும் சரியான தரவாக இல்லையென்றாலும், ஓரளவிற்கு உண்மையான செய்திகளைக்கொண்டிருந்தது எனக்கு உதவிகரமாக இருந்தது.
இந்திய வரலாறு குறித்து நீங்கள் நிறைய எழுதி வருகிறீர்கள். உங்களுடைய நூல்களை ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் திட்டம் இருக்கிறதா?
இலக்கிய விழாக்களில் பங்கேற்கும் நிறைய வாசகர்கள் இந்திய மொழிகளில் வாசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு மொழிபெயர்க்கும் திட்டம் இருக்கிறது. அதற்கு ஏற்ற பதிப்பகங்களும், மொழிபெயர்ப்பாளர்களும் கிடைத்தால் நிச்சயமாக என்னுடைய நூல்கள் மொழிபெயர்க்கப்படும்.