டிரம்ப்பின் நான்கு ஆண்டுகள் இப்படித்தான் இருக்கப்போகின்றன... அடித்துச்சொல்லும் கனடா எழுத்தாளர்..!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் எண்ணற்ற சர்ச்சைகள் . தினந்தோறும் ஏதேனும் ஒரு வரியை சுமத்திக்கொண்டே இருக்கிறார். அதிலும், குறிப்பாக கனடா, மெக்ஸிகோ அரசுகள் மீது கடுமையான சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜெய்ப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் கோலகலமாக நடக்கும் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா மூலம் கனடா எழுத்தாளர் ஜான் வேலியன்ட் அறிமுகமானார். இயற்கை குறித்து பெரும் அக்கறை கொண்ட மனிதர் ஜான் வேலியன்ட். அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து கனடா எழுத்தாளர் ஜான் வேலியன்ட்டிடம் பேசியதிலிருந்து..
அடுத்தடுத்தடு அதிரடி அறிவிப்புகள்... டிரம்ப் ஆட்சிக்காலம் எப்படி இருக்கும்..?
முதலில் சுவர் எழுப்பபோறேன் என்றார். ஆனால், அவர் நினைத்த மாதிரியெல்லாம் எதுவும் செய்ய முடியாது. அவர் பூச்சாண்டி காட்டுவாரே ஒழிய, பெரிதாக எதுவும் செய்யமாட்டார். அவரிடம் எதற்கும் முழுமையான செயல்திட்டம் கிடையாது. அமெரிக்காவும் கனடாவும், மெக்ஸிக்கோவும் பொருளாதார ரீதியாக , கலாசார ரீதியாக பின்னிப்பிணைந்திருக்கிறது. அவரின் இந்த தடாலடி அறிவிப்புகள் ஒரு சாராரை திருப்திப்படுத்தலாம். ஆனால், இது ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராகவே சென்று முடியும். வெறுமனே உலகத்தில் இருந்து தள்ளி இருக்க, அமெரிக்கா தனக்குத்தானே சுவர் எழுப்பிக்கொண்டதாகத்தான் இது முடியும். இதை அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா உணரப்போகிறது. ஆனால், அதற்கு நாம் இழக்கப்போவது அதிகம்.
பொருளாதார ரீதியாக இது எத்தகைய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.?
எங்களை விடுங்கள். உங்களை எடுத்துக்கொள்ளுங்களேன். உண்மையில் இந்தியா மாதிரியான வளர்ந்துவரும் தேசத்திற்கு அமெரிக்கா எந்த அளவுக்குத் தேவை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா, கொரியா என மிகப்பெரிய பொருளாதார சந்தையை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பார்மா, ஐடி செக்டார் பாதிக்கப்படலாம். ஆனால், அமெரிக்காவைக் கடந்து யோசிக்க வேண்டிய நிலைக்கு எல்லோரையும் கொண்டு செல்கிறார்கள்.
எலெக்ட்ரிக் கார்களில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் பக்கம் சென்றிருப்பது; ஸ்டிரா பயன்படுத்த அனுமதி போன்ற அறிக்கைகளை எப்படி எடுத்துக்கொள்வது?
நான் வசிக்கும் கனடாவிலிருந்து தெற்கு கலிஃபோர்னியா வரை காரில் சென்றிருக்கிறேன். நிறைய எலெக்ட்ரிக் கார்களைப் பார்க்கிறேன். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகக் கார்களைப் பார்க்கிறேன். நார்வே, சைனா அளவுக்கு இல்லையென்றாலும், இங்கும் மக்கள் தாமாகவே எலெக்ட்ரிக் பக்கம் மாறுகிறார்கள்.
உங்களுடைய The tiger புத்தகத்திற்கும் எங்களுக்கு நீண்ட நெடிய தொடர்பிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் மனிதர்களைப் புலி வேட்டையாடுவதைப் போலவே, இந்தியாவில் அடிக்கடி சம்பவங்கள் நடைபெறுவதுண்டு..!
இந்தியாவில் ஆண்டுக்கு 800க்கும் அதிகமானோர் புலிகளால் கொல்லப்படுகிறார்கள் என்பதே எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. மனிதர்களைப் போல் விலங்குகள் பழி வாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. உண்மையில் எந்த விலங்கிற்கும் பழிவாங்கும் எண்ணமெல்லாம் கிடையாது. அது மனிதர்களை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. அந்த அச்சுறத்தலை விலக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. உங்களை அதன் எல்லைக்குள் வந்த ஒரு அழையா விருந்தாளியாகவே புலி பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும். அதன் எல்லைக்குள் ஒரு காட்டுப்பன்றியும், மனிதனும் செல்கிறார்கள் என எடுத்துக்கொள்ளும். அது நிச்சயம் மனிதனைத்தான் தாக்க வரும். மனிதன் தன் உணவான காட்டுப் பன்றியை எடுத்துவிடுவான் என்கிற எண்ணம் அந்த புலிக்கு வரும். வயதான , காயம்பட்ட புலிகளின் கதை வேறு. நமக்கு உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. புலிக்கும் அப்படித்தான். எது சரி, எது தவறு என்பதெல்லாம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதீதமாக காயம்பட்ட புலியால் மானையோ, பன்றியையோ வேட்டையாட முடியாது. அதன்பின்னர் தான் எளிய எதிரியான மனிதனை குறிவைக்கத் தொடங்குகிறது. அதன் வேட்டை யுக்திகளை மாற்றிக்கொள்கிறது. மனிதர்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப அதன் செயல்திட்டங்களை மாற்றிக்கொள்கிறது. அது கிட்டத்தட்ட அதனுடைய டயட்டை மாற்றிக்கொள்கிறது. சிறுத்தைப்புலிகளின் கதை வேறு. அதனை இதனுடன் ஒப்பிட முடியாது.