சக்கர வியூகம் 20

“இன்னும் நீ சக்கரவியூகத்திலிருந்து விடுபடவில்லை” என்றது மனது.
சக்கர வியூகம் 20
சக்கர வியூகம் 20புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 20 - சக்கர வியூகம்

கண்விழித்தபோது முதலில் ஆர்ஜேதான் தெரிந்தார். முதலில் அது சொர்க்கமா என்றுதான் கேட்க எத்தனித்தேன். சுற்றிலும் அரபு மொழி அரவங்கள் அதைக்கேட்க விடாமல் தடுத்தன. ஏதோ இயந்திரச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சீலிங்களில் ஒளிச்சிதறல்களை வைத்து அது விமானமாக இருக்கலாம் என்று ஓரளவு கண்டுகொண்டேன். 

இப்போ பரவால்லயா கேர்ள், நீ வைன் குடிப்பாய் என்பது எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டது பார்த்தாயா? எவ்வளவோ தூர தேசங்களில் நான் நிராகரித்த சிறந்த போத்தல்களை உனக்காவது வாங்கி வந்திருக்கலாம்” என்றார் வழக்கமான இடிச்சிரிப்புடன்.

கண்கள் மூடும்போது அவர் மேலிருந்த வெறுப்பெல்லாம் அவர் குரல் கேட்ட கணத்திலேயே தவிடுபொடியானது.

“நாம எங்கே இருக்கோம் ஸ்வாமி?”

“ நீ நினைத்தது போல இது சொர்க்கம் இல்ல கேர்ள். அதுக்கு இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. இது ஒரு சார்ட்டட் ஃபிளைட், இன்னும் சில மணி நேரங்கள்ள நாம ஒரு ஐரோப்பிய நாட்டுல இறங்கிடுவோம்.

ஸ்வாமி, ஷேக்?” என்றேன் குழறலாக

ஷேக்... ஹீ ஈஸ் நோ மோர் ஷேக்” என்றால் தலையைக்குலுக்கியபடி அவரின் நடிகபாவனை முகத்தோடு. 

அய்யோ” என்றேன், குரல் பெருக்கி

பயப்படாதே கேர்ள், ஹீ ஈஸ் னாட் ஒன்லி அ ஷேக் பட் ஆல்ஸோ அவர் ஹைனஸ் என்றுதான் சொல்ல வந்தேன். இந்த நாட்டின் மன்னராக இன்னும் சில நாட்களில் அவர் பொறுப்பேற்பார்” என்றார்.

மேலும் குழம்பினேன்...

யெஸ் மிருணாளினி, அந்த செய்தியை உன்னிடம்தான் முதலில் பகிரத்தான் எண்ணினேன், ஆனால் ஸ்க்ரீமிங் ஈகிள் உன்னை ஆட்கொண்டுவிட்டது” என்றது ஷேக்கின் மிக மெல்லிய அரபு கலந்த ஆங்கிலக்குரல்.

வலது புறம் இருந்த பெரிய ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்ததை அது வரையில் கவனிக்கவே இல்லை

ஷேக்” என்று மிகுந்த அவசரத்தில் எழ முற்பட்டேன்

ஸ்லோலி, ஸ்லோலி” என்றார் புன்னகையுடன்.

எங்களை மன்னித்துவிடு மிருணாளினி, இந்த அரசியல் விளையாட்டில் ஒரு எல்லை வரையில்தான் செய்திகளை வெளியே சொல்ல முடிந்தது. எதுவும் சொல்லாமலே உன்னையும் ஒரு பாத்திரமாக்கியதில் எனக்கு வருத்தம்தான்” என்றார்.

"அவர் மன்னராவதற்கு தடையாக இருந்த பல விஷயங்களை மிக மிக லாவகமாக இந்த 17 நாட்களும் எடுத்துக்கொண்டிருந்தோம். நேற்று 18வது நாள் குருஷேத்திரமில்லையா, அதனால் உச்சபட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டு ராணுவத்தளபதியிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறோம். நாம் கிளம்பியதோ, அந்தக்குப்பைகள் அகற்றப்பட்டதோ வழக்கம்போலவே மக்களுக்குத் தெரியாது.

இன்னும் சில நாட்களில் நாம் நாட்டிற்குத் திரும்பும்போது ஷேக் மன்னராக பதவியேற்பார்"

அப்போது குறுக்கிட்டுப்பேசிய ஷேக், 

இத்தனை நாள்கள் நீ செய்த உதவியை விட இனிமேல்தான் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் மிருணாளினி. இன்னும் சில நாட்களில் நான் மன்னராய்ப்பதவி ஏற்கும்போது நாட்டின் முதல் வெளி நாட்டு அமைச்சர் என்ற பெருமையை உனக்கு அளிக்கவிருக்கிறேன். அதை நீ ஏற்கவேண்டும்” என்றார்

ஆர்ஜே குறுக்கே புகுந்து, 

அதனை நான் மறுதலிக்கிறேன் ஷேக், நீங்கள் சில நாட்களாக என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்கு ஆசிரமம் அமைக்கும் முடிவை இப்போது எடுத்திருக்கிறேன். என் நடமாடும் ஆசிரமத்தின் முதல் உறுப்பினராக மிருணாளினியையும் நியமித்திருக்கிறேன். ஆகவே உங்கள் அமைச்சர் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்?” என்றார் மாறா சிரிப்புடன்.

சிரிப்பதா, அழுவதா என்று என் மனம் முடிவு செய்யப்படும் முன்னே

இல்லை இல்லை. ஒரு செயல் வீராங்கனையை காவி உடுத்தி காட்டுக்குக் கூட்டிப்போகும் உங்கள் வன்செயல் கண்டிக்கத்தக்கது. என் அரசாங்கத்தில் அதற்கு கடும் தண்டனையும் உண்டு. மிருணாளினி என்னுடைய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை” என்றார் ஷேக் இன்னும் அதீத சிரிப்புடன்.

அவர்களிரண்டு பேரின் இந்த போலிச்சண்டை போன்ற மகிழ்வுரையாடலினூடே!

“இன்னும் நீ சக்கரவியூகத்திலிருந்து விடுபடவில்லை” என்றது மனது. 

ஃப்ரீசர் பாக்சிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழம் கைப்பையின் ஓரத்தில் இருந்ததைத் தொட்டுப்பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். 

[இந்த பாகம் முற்றும் – மிருணாளினியின் போராட்டம் தொடரும்]

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com