
49ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனத்தில் நடைபெற்றுவருகிறது. சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி வெளியாகி கவனம் ஈர்த்துள்ள புதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
குமாரத்தி
நரன் பதிப்பகம்
சால்ட் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நாவல். கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையின் மூலம் கடலோர மக்களின் வாழ்வியலைப் பேசும் நாவல்.
பொய்யுரு
காலச்சுவடு பதிப்பகம்
பரிசோதனை ரீதியிலான படைப்புகளுக்குச் சொந்தக்காரரான வில்லியம் எஸ். பர்ரோஸின் குறுநாவல் இது. ஒரு தீவில் வந்தேறிகளால் நிகழும் சுற்றுச்சூழல் பேரழிவு, கொள்ளை நோய்களின் தோற்றம், அவற்றுக்கான மருத்துவம், அதன்பின்னுள்ள அரசியல் போன்றவற்றைப் பேசும் குறுநாவல் இது.
பட்டறை
பரிசல் பதிப்பகம்
சிறுதொழிற்கூடம் ஒன்றை மையமாகக் கொண்டு இயங்கும் நாவல் இது. தமிழ் நாவல்களில் இதுபோன்ற களம் மிகவும் புதிது. பட்டறை வாழ்க்கையில் மனிதர்களின் எல்லா விதமான பண்புகளையும் உணர்வுகளையும் பேசும் நாவல் இது.
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
நீலம் பதிப்பகம்
கேரளத்தில் அடிமை வியாபாரம் பற்றிப்பேசும் நூல் இது. தென்னிந்தியாவில் நிலவிய தீண்டாமைக்கும், உலகஅளவில் வலுப்பெற்று எழுந்த அடிமை வியாபாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்ற புதிய வாசிப்பை முன்வைக்கிறது இந்நூல்.
சிறார் நூல்கள்
புக் ஃபார் சில்ட்ரன் பதிப்பகம்
கொ.மா.கோ. இளங்கோவின் ‘மொகாபாத் மர்மம்’ இளையோர் நாவல், இ.பா.சிந்தனின் ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா…’ புத்தகம், உஷா ராஜேந்திரன் தொகுத்த ‘குழந்தைகளின் ரகசியம்’, மலையாளத்தில் அஷீதா எழுதி, தமிழில் உதயசங்கர் மொழிபெயர்த்த ‘காக்கா கொண்டுபோச்சு’ ஆகிய நான்கு சிறார் நூல்கள் சிறாரின் அழகிய உலகத்துக்கானவை.