
இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
ஆழமான மொழி வெளிப்பாடு, தீவிரமான பேசுபொருள், வாழ்க்கையை மையமிட்ட கருப்பொருள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு இந்த ஆண்டு பல புத்தகங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள் கவனிக்கவைத்த10 புத்தகங்களைப் பற்றி பார்க்கலாம்.
யுவான் ரூல்ஃபோ எழுதி இல. சுபத்ரா மொழிபெயர்த்த இந்தச் சிறுகதை நூல் மெக்சிகோ புரட்சிக்குப் பிந்தைய வறுமையையும் வன்முறையையும் சுட்டெரிக்கும் நிலப்பரப்பின் பின்னணியில் விவரிக்கிறது. பிற்கால 'மாய எதார்த்த' வகைமைக்கு முன்னோடியாகத் திகழும், ஆழமான மனித உணர்வுகளைப் பேசும் சிறுகதைத் தொகுப்பு இது. இந்நூல் எதிர் பதிப்பகத்தின் வெளியீடு.
ஆல்டஸ் ஹக்ஸ்லி எழுதி ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த இந்நூல் மரபணுப் பொறியியல் மூலம் மனித உணர்வுகள் கட்டுப்படுத்தப்படும் இருண்ட எதிர்காலச் சமூகத்தை எச்சரிக்கிறது. இது, அறிவியல் வளர்ச்சி உச்சமடையும்போது, மனிதன் தனது ஆன்மாவையும் சுதந்திரத்தையும் இழப்பதைச் சித்தரிக்கும் டிஸ்டோப்பியன் படைப்பு. இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு.
பேட்ரிக் ஆலிவெல் எழுதி, சீனிவாச ராமாநுஜம் மொழிபெயர்த்த இந்நூல் கல்வெட்டு ஆதாரங்களின் வழியே அசோகரின் உண்மையான ஆளுமையை மீளுருவாக்கம் செய்கிறது. ஒரு பேரரசரின் 'தர்மம்' எவ்வாறு அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட அறமாக இருந்தது என்பதை ஆய்வின் மூலம் இந்நூல் விளக்குகிறது. இந்நூல் எதிர் பதிப்பகத்தின் வெளியீடு.
நர்மதா தேவி எழுதிய இந்த நூல் மனிதச் சமூகத் தோற்றம் முதல் இன்றுவரை நிகழும் பெண்ணடிமைத்தனத்தை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது. வீட்டு உழைப்புச் சுரண்டல் முதல் நவீனத் தொழிற்பேட்டை அவலங்கள் வரை தரவுகளுடன் பேசும் முக்கிய நூல் இது. இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.
டி. தருமராஜ் எழுதிய இந்த நூல் அன்றாட நிகழ்வுகளை மானுடவியல் மற்றும் எதிர்ப்பு அரசியலின் பின்னணியில் புதிய கோணத்தில் அணுகுகிறது. பூர்வ பௌத்தம் முதல் சமகாலத் திரையிசை வரை எனப் பல தளங்களில் பயணிக்கும் சிந்தனைத் தூண்டல் கட்டுரைகள் இவை. இந்த நூல் சால்ட் பதிப்பகத்தின் வெளியீடு ஆகும்.
மதாரின் இந்தக் கவிதைத் தொகுப்பு எளிய தருணங்களை அதீதக் கற்பனையுடனும் அணுகும் நவீனக் கவிதைத் தொகுப்பு. மொழியின் செழுமையால் வாழ்வின் புதிர்களைத் தத்துவார்த்தமாகவும் அதே சமயம் எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது. இது அழிசி பதிப்பகத்தின் வெளியீடு.
என். ஸ்ரீராம் எழுதிய இந்த நாவல் ஒரு நிலப்பரப்பின் வரலாற்றையும் அதன் ஆன்மாவையும் நினைவுகளின் ஊடாகப் பயணித்து நுணுக்கமாகப் பதிவு செய்கிறது. இது சாமக்கோடாங்கிகளைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் ஆகும். இது பரிசல் பதிப்பகத்தின் வெளியீடு.
மு. குலசேகரன் எழுதிய இந்த நாவல் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகக் கிராமப்புற நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங்களைப் பேசுகிறது. நவீன வாழ்வின் நெருக்கடிகளையும் மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்களையும் பன்முகப் பார்வையில் விவரிக்கும் முக்கியமான படைப்பு இது. இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு.
மானசீகன் எழுதிய இந்த நாவல் செல்வச் செழிப்பை இழந்து வறுமையில் வீழும் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் சிதைவுகளைப் பேசுகிறது. 90களின் வாழ்க்கையை வட்டார வழக்கில், திரை ஓவியம்போலச் சித்தரிக்கும் நாவல் இது. இந்த நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இலங்கை தமிழ் எழுத்தாளர் தில்லை எழுதிய ‘தாயைத்தின்னி’ நாவல் இலங்கையின் கிராமப்புறப் பின்னணியிலும் போர்ப் பின்னணியிலும் தாயை இழந்த சிறுமி ஒருத்தி சந்திக்கும் சமூகப் புறக்கணிப்பையும் ஆணாதிக்க வன்முறையையும் பேசும் நாவல். இருத்தலியல் சிக்கல்களைக் கவித்துவமான மொழியில் சித்தரிக்கும் அதிர்ச்சியூட்டும் பதிவு இந்த நாவல். இந்த நாவலை தாயதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.