குளிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது... மருத்துவர்கள் கூறுவது என்ன?
பருவகால மனச்சோர்வு என்பது குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவால் ஏற்படும் மனநிலை மாற்றம் ஆகும். இது மகிழ்ச்சியை குறைக்கும் செரோடோனின் குறைவால் ஏற்படுகிறது. இதை சமாளிக்க வெளியில் சென்று மக்களுடன் கலந்துகொள்வது, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முக்கியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வருடத்தின் பெரும்பகுதி சூரிய ஒளியுடன் காணப்படும் வெப்பமண்டலப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உலகின் பல நாடுகளில், குளிர்காலம் என்பது வெறும் பனிக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல; பலரை செயலின்மைக்குள் தள்ளும் மனச்சோர்வு காலகட்டம். இது பருவகால மனச்சோர்வு (Seasonal Affective Disorder - SAD) என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவகால மனச்சோர்வு ஏற்படும்போது, முன்பு பிடித்தமான செயலில் கூட ஆர்வம் இல்லாமல் போய்விடும், இனம் புரியாத சோகம் ஏற்படும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்படும், எந்த வேலையும் செய்வதற்கும் ஊக்கம் இருக்காது, இனிப்பு, மாவுசத்து உணவுகளில் அதிக நாட்டம் ஏற்படும்.
டென்மார்க், நார்வே, சுவீடன் உள்ளிட்ட ஸ்கேண்டிநேவியன் நாடுகள், கனடா, அமெரிக்கா என அதிக குளிர் காணப்படும் நாடுகளில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான பனிக்காலத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த சீசனல் டிப்ரஷனுக்கு மிக முக்கியக் காரணம், சூரிய ஒளி இன்மை. இப்பகுதிகளில் குளிர்க்காலங்களில் பகல் பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் இருக்கும். இதனால், அங்குள்ள மக்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைப்பதில்லை. சூரிய ஒளி குறைவதால் நமது உடலில் இரசாயன சமநிலை பாதிக்கப்படுகிறது.
செரோடோனின் என்பது மகிழ்ச்சியான மனநிலைக்கு காரணமான மூளை இரசாயனமாகும். சூரிய ஒளி குறையும் போது செரோடோனின் அளவும் குறைகிறது. இதுவே மனச்சோர்வுக்கு அடிப்படை காரணமாகிறது. இருள் அதிகமாகும் போது, தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் அதிகப்படியான தூக்கம், மந்த நிலை மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மிக முக்கிய வைட்டமின் டி குறைவதும் மனநிலையைப் பாதிக்க ஒரு காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இந்தப் பருவகால மனச்சோர்வை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன. பகல் நேரத்தில் வீட்டுக்குள் முடங்கி இருக்கக் கூடாது. சிறிது நேரமாவது மக்கள் புழங்கும் இடத்தில் உலாவ வேண்டும். நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதை வழக்கமாக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையும், உடற்பயிற்சியும் பருவகால மனச்சோர்வை எதிர்கொள்வதற்கான முக்கிய கருவி என்கின்றனர் மருத்துவர்கள்.

