பானி பூரியை கொண்டாடும் Google Doodle! என்ன காரணம்? பானிபூரியின் வரலாறு என்ன?

பானி பூரியை கூகுள், தனது டூடுல் மூலம் கொண்டாடியுள்ளது. இதை கூகுள் இப்போது கொண்டாட என்ன காரணம்? பானிபூரி பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்...
Google Doodle
Google DoodleGoogle

பானி பூரி... இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்கள் மற்றும் சுவை மாறுபாடுகளைக் கொண்ட ஸ்நாக் வகை உணவான இது, வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் ஃபேவரைட்தான்! அப்படி பல்வேறு பெருமைகளை கொண்டுள்ள பானிபூரியை கூகுள், தனது டூடுல் மூலம் கொண்டாடியுள்ளது. இதை கூகுள் இப்போது கொண்டாட என்ன காரணம்? பானிபூரி பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்...

பானி பூரி
பானி பூரி

கடந்த ஜூலை 12, 2015 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு உணவகம் 51 வெவ்வேறு சுவையில் பானி பூரிகளை உருவாக்கி உலக சாதனை படைத்தது. இந்த சாதனையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கூகுள் இப்போது அங்கீகரித்து கௌரவித்துள்ளது. வண்ணமயமான டூடுலைப் பயன்படுத்தி கூகுள் இதை கௌரவத்தை பானிபூரிக்கு அளித்துள்ளது.

பானிபூரியானது, பிளாட்பிரெட்டில் தயார் செய்யப்படும் ஸ்நாக் வகை உணவு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அங்குள்ளோரின் சமையலுக்கு ஏற்றபடி பூரியின் சுவை மாறுபடும். கூடவே பூரியுடன் உடன் பரிமாறப்படும் நீர் (அதுதான் பானி), உள்ளே வைக்கப்படும் மசாலா பொருட்கள் அனைத்தும் மாறுபடும்.

உதாரணமாக மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வெள்ளை பட்டாணி கலவை மற்றும் காரம் சேர்க்கப்பட்ட நீரால் பானி பூரி பரிமாறப்படும். இதுவே டெல்லி, பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களில் வேறுமாதிரி இருக்கும். தமிழ்நாட்டில் பட்டாணி - சுண்டல் போன்றவற்றால் நிரப்பப்பட்டு, மசாலா பானி பூரியாகவோ புதினோ நீருடன் கொடுக்கப்படும் பானிபூரியாகவோ விற்கப்படும்.

பானி பூரி
பானி பூரி

சில வட மாநிலங்களில், பானி பூரி கோல் கப்பாஸ் என்று அழைக்கப்படும். கோல் கப்பாஸ் என்பது, உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையின் கலவையால் நிரப்பப்பட்டு ஜல்ஜீரா சுவையுள்ள தண்ணீருடன் கொடுக்கப்படும் ஸ்நாக் வகை. மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில், பானிபூரியை புச்காஸ் அல்லது ஃபுச்காஸ் என்பர். இவற்றில் அதிகம் புளிக்கரைச்சல் சேர்க்கப்படும்.

இப்படி இந்தியா முழுவதும் பலவிதமான சுவைகளை கொண்ட பானி பூரி, மில்லியன் கணக்கான Foodie-க்களை தன்வசம் கொண்டுள்ளது. அதையொட்டியே கூகுள் இன்று இந்த பிரியமான சிற்றுண்டியை ஒரு டூடுலுடன் கொண்டாடுகிறது.

பானி பூரி
பானி பூரி

இந்த நேரத்தில், பானி பூரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்...

* பானி பூரி முதன்முதலில் மகதாவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த இடம், இன்றைய தெற்கு பீகாரில் உள்ளது. பீகாரில் பானிபூரி ‘ஃபூல்கி’ (Fulki) என்று அழைக்கப்படுகிறது.

* பல பெயர்களைக் கொண்ட இந்த ஸ்நாக், பானி பூரி, கோல் கப்பா, புச்கா, பால்க், பகோடி, குப் சுப், பானி கே பதாஷே என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெயரளவில் வேறுபட்டாலும், இதன் மீதான காதல் மாறாமல் அப்படியே உள்ளது.

பானி பூரி
பானி பூரி

* பானி பூரி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான முறையில் செய்யப்படுவதில்லை. இதில் மேற்கு வங்காளத்தில் காணப்படும் ஃபுல்கா, இனிப்புக்கு பதிலாக கசப்பான சுவை கொண்டது. இதில் பூரியின் நடுப்பகுதி பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்த பருப்பின் கலவையால் நிரப்பப்பட்டு தரப்படும்.

* பானி பூரியில் எத்தனை கலோரிகள் உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சொல்கிறோம் கேளுங்கள்... ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் தகவலின்படி, பானி பூரியில் 270 கலோரிகள் உள்ளதாம். இந்த கலோரிகளை எரிக்க நீங்கள் சுமார் 26 நிமிடங்கள் ஓட வேண்டும்!

பானி பூரி
பானி பூரி

* சிலர் பானி பூரி மகாபாரத காலத்திலேயே இருந்ததாக சொல்கின்றனர். அந்தவகையில் பாண்டவர்களின் தாயான குந்தி, தன் மருமகள் திரௌபதியை சமைக்க சொன்னபோது அவர் எஞ்சியிருந்த சிறு மாவில் பானிபூரி செய்து கொடுத்தாரென சொல்லப்படுகிறது. இருப்பினும் இதற்கு ஆதாரம் ஏதுமில்லை!

- சங்கரேஸ்வரி.S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com