‘விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது’ - ஆஸ்திரேலிய ஜாம்பவான்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகப்பட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று போட்டியின்போது வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில், “களத்தில் விளையாடும்போது விராட் கோலி காட்டும் ஆக்ரோஷம் பிடித்திருந்தது. பிசிசிஐ அவருக்கு அநீதி இழைத்துள்ளது, வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், மரியாதை நிமித்தமாக அவரை தொடர அனுமதிக்க வேண்டும். விராட் கோலியிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவரது ஆக்ரோஷம், அவரது ஆர்வம், அவரது பேட்டிங் எல்லாமே பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான கேப்டன்” என்று புகழாராம் சூட்டியுள்ளார்.
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தோனிக்குப் பிறகு 3 வடிவ போட்டிகளுக்கும் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியுடன், 20 ஓவர் வடிவ போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். அப்போதே, பிசிசிஐ மற்றும் விராட் கோலிக்கு இடையில் கருத்து மாறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஒருநாள் வடிவ போட்டிகளின் கேப்டன்ஷியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். 50 ஓவர் வடிவ போட்டிகளின் கேப்டன்சி பதவியில் நீடிக்க விராட் கோலி விரும்பியபோதும், சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு அவரை நீக்கியது.
மேலும், கேப்டன்சி பொறுப்பை விட்டு தன்னை நீக்குவது குறித்து, அந்தப் பதவியிருந்து நீக்குவதற்கு 90 நிமிடங்கள் முன்புதான் தனக்கு தகவல் தெரிவித்ததாக விராட் கோலி குற்றஞ்சாட்டியிருந்தார். அதன்பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கேப்டன்சி பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இதனையடுத்து, இந்திய அணியின் 3 வடிவ போட்களுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகி 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஜஸ்டின் லாங்கர் நேற்று அவரை புகழ்ந்து பேசியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது விராட் கோலி, தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பிய நிலையில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான் ஜஸ்டின் லாங்கர்.