மீண்டும் மத சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ- ஊழியர்கள் போர்க்கொடி
மத நம்பிக்கைக்கு எதிரான சில உணவுகளை டெலிவரி செய்ய சொல்வதாக சொமாட்டோ மீது அந்நிறுவன ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோ சமீப காலமாக பரபரப்பில் சிக்கி வருகிறது. ஒரு வாடிக்கையாளரின் மத ரீதியிலான புகாருக்கு பதிலளித்த சொமாட்டோ, உணவுக்கு மதம் இல்லை; உணவே மதம்தான் என்று தெரிவித்தது. சொமாட்டோவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது சொமாட்டோ ஊழியர்களே அந்நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சொமாட்டோ ஊழியர்கள் தங்களது மத நம்பிக்கைக்கு எதிரான சில உணவுகளை டெலிவரி செய்ய சொல்வதாக சொமாட்டோ மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறியை டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனம் வற்புறுத்துவதாக இந்து மற்றும் இசுலாமிய ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தங்களது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதால் மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி விற்பனைக்கு எதிராக நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க அமைச்சர் ராஜிப் பேனர்ஜி, எந்த நிறுவனமும் மதங்களுக்கு எதிராக யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இது தவறானது என்றும் தெரிவித்தார்