ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மீது தடியடி : வீடியோ பதிவு
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மீது சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடியடி நடத்தியுள்ளனர்.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப் பேரை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் இந்த இரு தேர்தல்களுக்கும் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்கள் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம் செய்தார். அந்தப் பிரச்சாரத்தில் அவர் சந்திரபாபு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் கூட்டம் முடிந்த பின் ஜெகன் மோகன் ரெட்டி தனது காரில் திரும்பி சென்றார். அப்போது அவரின் காரை பின் தொடர்ந்து செல்ல ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் உண்டானது.
இதனால் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் அவர்கள் வீரர்கள் மீது கற்களை வீச தொடங்கினர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வர சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடியடி நடத்தினர். அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.