சந்திரபாபு நாயுடு 'வழி'யில் ஜெகன்... குறிவைக்கப்படுகிறாரா 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்?!

சந்திரபாபு நாயுடு 'வழி'யில் ஜெகன்... குறிவைக்கப்படுகிறாரா 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்?!
சந்திரபாபு நாயுடு 'வழி'யில் ஜெகன்... குறிவைக்கப்படுகிறாரா 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்?!


ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவைப் போலவே ஜெகன் மோகன் ரெட்டியும் பழிவாங்கல் அரசியலைக் கையிலெடுத்துள்ளாரா என்ற சந்தேகமே அங்கு இப்போது பெரும் பரபரப்பான விவாதப் பொருளாக இருக்கிறது. நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணும், அவரது சமீபத்திய 'வக்கீல் சாப்' படமும் இதன் பின்புலத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அம்மாநில மக்களின் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட நபராக வலம் வருகிறார். இது சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வென்றதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாக தெலுங்கு தேசம் தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஜெகன் ஈடுபட்டு இருந்தார். இது மக்கள் மத்தியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்த நிலையில், அதைப் பொய்யாக்கும் விதமாக தேர்தல் வெற்றி கிடைத்துள்ளது. அவரது பழிவாங்கும் முறை, தேர்தல்களில் எந்த எதிர்மறையான விளைவையும் காட்டவில்லை.

காரணம், முன்பு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசில் இதே மாதிரியான பழி வாங்கல் நடவடிக்கைகளை ஜெகனும் எதிர்கொண்டார் என்பதுதான். ஜெகன் எதிர்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரசின் முக்கிய பலியாக மக்கள் பார்த்தார்கள். மக்கள் மத்தியில் அது அனுதாப அலையை ஏற்படுத்தியது. மேலும், அதுவே மக்கள் அவரை முதல்வராக்கும் அளவுக்கு கைகொடுத்தது.

அதனால் தெலுங்கு தேசம் தலைவர்கள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மக்கள் ஏதும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், ஜெகனின் மற்றொரு நடவடிக்கை தற்போது விமர்சனங்களையும், சந்திரபாபு செய்த அதே விஷயத்தை அவரும் செய்யத் தொடங்கியுள்ளாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் தனது நீண்டகால எதிரி அல்லாத ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்று சந்தேகிக்கின்றனர்.

ஆம், அது தெலுங்கு சினிமாவின் 'பவர் ஸ்டார்' என அழைக்கப்படுபவரும் ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண்தான். 'பிங்க்' ரீமேக் படமான 'வக்கீல் சாப்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பவன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான படம் இது என்பதால் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். படத்தின் வசூல் பல்வேறு ரெக்கார்டுகளை முறியடித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஜெகன் அரசு குடைச்சல் கொடுத்தது யாரும் எதிர்பாராத சம்பவமாக அமைந்தது.

'வக்கீல் சாப்' படம் வெளியானபோது, படத்தின் டிக்கெட் விலை தொடர்பாக ஜெகன் அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. வெவ்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள வெவ்வேறு திரையரங்குகளுக்கு வெவ்வேறு நிலையான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது அந்த அரசாணை. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திரையரங்குகளுக்கு ஒவ்வொரு விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜெகன் அரசு எடுத்த இந்த நடவடிக்கை, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதுடன், பவன் மீதான அரசியல் தாக்குதலாக கருதுகின்றனர். பவனின் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜெகனை எதிர்த்தே இருக்கிறது. இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கும் திருப்பதி மக்களைவைத் தேர்தலில் ஜெகன் கட்சியை எதிர்த்து பாஜக நேரடியாக களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் பவன், தான் நிற்பது போலவே கருதி தேர்தலில் பம்பரமாக சுழன்று வருகிறார். ஜனசேனா கட்சியின் முக்கிய தலைகளை பிரசாரத்தில் முடுக்கிவிட்டுள்ளார். இது ஆளும் கட்சிக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை நிதி ரீதியாக முடக்கவே இப்படி ஒரு நடவடிக்கையை ஆளும் அரசு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசியுள்ள ஜனசேனா பிரமுகர் ஒருவர், "எல்லா பிராந்தியங்களிலும் ஒரே விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படும்போது, எல்லா பகுதிகளிலும் மின்சார கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்போது, தியேட்டர்களுக்கு ஏன் வெவ்வேறு டிக்கெட் விலை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அரசு தரப்பில் முறையான விளக்கம் வெளியாகவில்லை. எனினும், சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா', ராஜம மவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்து வரவிருக்கிறது. அந்த படங்களுக்கும் அரசாங்கம் அதே அரசாணையை பயன்படுத்துமா என்பது தெரியவில்லை.

அப்படிச் செய்தால் திரைத்துறையில் இருந்து ஜெகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பும். அரசாணையை பயன்படுத்துவது இல்லை என்றால் 'வக்கீல் சாப்' மீது மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பொதுமக்களால் என்றென்றும் நினைவில் வைக்கப்படும். இந்த இரண்டுமே ஜெகனுக்கு நல்லதல்ல. சந்திரபாபு செய்த அதே நடவடிக்கையை ஜெகனும் கையில் எடுத்தால், அது அவருக்கு எந்த மாதிரியான தாக்கத்தை கொடுக்கும் என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்கின்றனர் ஆந்திர அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com