இனவெறியை தூண்டும் வீடியோக்களுக்கு தடை- யூடியூப் நிறுவனம் அறிவிப்பு
இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடைசெய்யப் போவதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிப்பது போன்ற வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக யூடியுப் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள யூடியூப் நிறுவனம் அது படிப்படியாக முழுமையாக அமல்படுத்தப்பட சில மாதங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உலகத் தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சமூகவலைதளங்கள் தாமாக முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

