மாட்டிறைச்சி வைத்திருந்ததாக மூவர் மீது கொலைவெறி தாக்குதல் - வைரல் வீடியோ
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் இளைஞர் மற்றும் பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முஸ்லிம் இளைஞர் மற்றும் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மே 22ம் தேதி சியோனி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. பின்னர், சமூக வலைத்தளங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வீடியோ வைரலானதை அடுத்து வெளியே தெரிய வந்தது.
திலீத் மால்வியா மற்றும் அவுசிப் கான் ஆகிய இரண்டு இளைஞர்கள் மற்றும் அன்சும் அன்சாரி என்ற பெண் மீதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராம் சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தடியால் அந்த இரண்டு இளைஞர்களையும் அவர்கள் சரமாரியாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவரை கொண்டே அந்தப் பெண்ணை செருப்பால் அடிக்க வைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சுபம் பஹேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சியோனி ‘ஸ்ரீராம் சேனா’ அமைப்பின் தலைவர் பஹேல் தாக்குதல் நடத்தியதுடன், அது தொடர்பான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிள்ளார்.
இத்துடன், இறைச்சி கொண்டு சென்றதாக தாக்குதலுக்கு ஆளான அந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி சோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் இதுபோன்று ஏற்கனவே பலமுறை மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலர் கொலை கூட செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு அரசே தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.