பெண் குழந்தைகள் பெற்றது குற்றமா? - ஐதராபாத்தில் கொடூர சம்பவம்
ஐதராபாத்தில் ஆண் குழந்தை பிறக்காததால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் கணவன், மனைவி தங்களது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் நகரைச் சேர்ந்த ரமேஷ்(32), தனது மனைவி மானசா(24) மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் பெத்தம்மா செருவு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். 6 மாத மற்றும் 3 வயது குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரமேஷ், மாசனா இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் ரமேஷின் பெற்றோர்களுடன் கொண்டபூரில் வசித்து வந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுத்ததற்காக ரமேஷின் தாயார் மாசனாவை கொடுமை செய்து வந்துள்ளார். ரமேஷ் தனது ஒரே மகன் என்பதால் தங்களது குடும்பம் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் மாசனாவை தொடர்ந்து திட்டி வந்துள்ளார். இதனால் ரமேஷின் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் வந்து கொண்டிருந்தது. ரமேஷூக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது தாய் தனது சொத்துக்களை மகள்களுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால், ரமேஷ் தனது சகோதரிகளுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
சொத்து விவகாரம் தொடர்பாக ரமேஷ் தனது வீட்டில் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோபத்துடன் பேசிவிட்டு அங்கிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மானசாவின் சகோதரர் அவர்களை தேடியுள்ளார். ஆற்றின் கரையில் ரமேஷின் ஸ்கூட்டி இருப்பதை கண்ட மாசனாவின் சகோதரர் போலீசில் தகவல் அளித்துள்ளார். போலீசாரின் தேடுதல் பணியில் நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து, ஆண் குழந்தை பிறக்காததால் தங்களது மகளை கொடுமைபடுத்தியதாக மாசனாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.