வீட்டை சூழ்ந்தது வெள்ளம்: அசந்த பாட்டியை அசத்தலாக மீட்ட விமானப்படை- வீடியோ
வெள்ளம் வீட்டை சூழ்ந்ததால், வெளியேற முடியாமல் தவித்த வயதானப் பெண்மணியை விமானப்படை வீரர் ஒருவர் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வட மாநிலங்களில் பருவ மழை பெய்துவருகிறது. மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் வடோதரா, அகமதாபாத், சூரத், சவுராஷ்டிரா, நவ்சாரி நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நவ்சாரி அருகே உள்ள சுமார் 12 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள், எங்கும் செல்ல முடியாத நிலை யில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
மழை தொடர்ந்து கடுமையாக பெய்து வருவதால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. இதனால், மக்க ளைப் மீட்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 45 கிராமங்களைச் சேர்ந்த 5000 பேர், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வயதான பெண்மணி ஒருவர் மீட்கப்படும் வீடியோ காட்சி ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ்சாரி நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டில் இருந்த பாட்டி தவித்துக்கொண்டிருந்தார். அவரை மீட்க விமானப்படை முடிவு செய்தது.
(கரண் தேஷ்முக்)
விமானப்படையின் இளம் வீரர் கரண் தேஷ்முக் ஹெலிகாப்டரில் இருந்து அவர் வீட்டருகே இறங்கி, அந்த வயதானப் பெண்ணை பத்திரமாக மீட்டு ஹெலிகாப் டரில் ஏற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.