அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - கேரள உயர் நீதிமன்றம்
சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு ஈடாக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்துக்கு செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது. பக்தர்களின் தொடர் போராட்டங்களால் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சபரிமலைக்கு வந்த பெண்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக கேரள காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்தது. இதுதொடர்பாக இதுவரை 2061 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய மாநில காவல் தலைமை அதிகாரி லோக்நாத் பெஹெரா, கைது செய்யப்பட்ட தகவல் உறுதியானது. அவர்கள் மீது வன்முறையை தூண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், மக்களை தாக்குதல், மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சபரிமலைப் போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி அப்பாவி மக்களை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள் என்றும் சட்டத்துக்கு புறம்பான கைது நடவடிக்கையை தடுக்க வேண்டுமெனவும் சுரேஷ் குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராமச்சந்திரன் மேனன், தேவன் ராமச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுக்கு நீதிபதிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். சுய விளம்பரத்துக்காக அரசு கைது நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது. கைது நடவடிக்கைகள் குறித்த விளக்கம் தேவை என்று தெரிவித்தனர்.
மேலும் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு ஈடாக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். சரியான விசாரணைக்கு பிறகே யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.