உபியில் கொடூரம்… 2 பெண்களை மானபங்கம் செய்து வீடியோ வெளியிட்ட வெறியர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் 2 பதின்ம வயது பெண்களை 14 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் தொல்லை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவ விட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருபெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 14 பேர் கொண்ட கும்பல் திடீரென அப்பெண்களை வழிமறித்தனர். திடுக்கிட்டு நின்ற அந்தப் பெண்களிடம் அந்தக் கும்பல் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது. இதை எதிர்பார்க்காத அந்தப் பெண்கள் கதறி அழுது விட்டுவிடும்படி மன்றாடினர். அதனை பொருட்படுத்தாத அந்த வெறியர்கள் பாலியல் தொல்லையில் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கியது. அத்துடன் நிற்காமல் இந்தக் கொடூரத்தை கைபேசியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களிலும் தைரியமாக பதிவேற்றி உள்ளனர். அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்கள் கதறி அழுவது கேட்பவர் மனதை உலுக்குகிறது.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிடும் அளவிற்கு பாஜக ஆளும் யோகிஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உபியில் இதுபோன்ற சம்பவங்கள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோ ஆதாரத்தை வைத்து முக்கிய குற்றவாளி ஒருவரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக, ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க ’ஆண்டி ரோமியோ ஸ்குவார்ட்’ அமைக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் ’ஆண்டி ரோமியோ ஸ்குவார்ட்’ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பினர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுப்பதை விட்டுவிட்டு, பொது இடங்களுக்கு வரும் காதலர்களை குறிவைத்து, அவர்களை அடித்து உதைத்து, அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பொது இடங்களில் காதலர்களுக்கு எதிராக ஆண்டி ரோமொயோ ஸ்குவார்ட் செய்யும் வன்முறை வெறியாட்டங்கள் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோக்களாக அம்பலமாகி வருகின்றன.