மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுப்பார்கள்: யோகி அதிரடி
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புகைபடங்கள் அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என அதிகாரிகள் சோதனையின் போது மாணவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வராததால் கல்வியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிகமாக சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது அனுப்புகிறார்கள் என குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரின் புகைப்படங்கள் அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும் எனவும் மாணவர்களிடம் படத்தில் உள்ள ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா என்று அடிக்கடி ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும் எனவும் யோகி உத்தரவிட்டுள்ளார்.
இனி வேலை பார்க்காமல் ஆசிரியர்களால் சம்பளம் வாங்க முடியாது எனவும் கல்வி தரத்தை அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் எனவும் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.