
உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவான அதீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த 16ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் உமேஷ் பால் கொலையில் சம்பந்தப்பட்ட அதீக் அகமதின் உறவினர்கள் உள்பட இதுவரை 6 பேர் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது, உத்தரப்பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதீக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உத்தரப்பிரதேசத்தில் இந்த படுகொலை சம்பந்தமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லக்னோ மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ”கலவரங்களுக்குப் பெயர்போன மாநிலம் உத்தர பிரதேசம். முந்தைய ஆட்சியில், அதாவது அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த 2012-2017க்கு இடையில் 700க்கும் மேற்பட்ட கலவரங்களை இம்மாநிலம் கண்டுள்ளது. இங்கு பல மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்கள் மூலம் மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.
ஆனால், 2017 முதல் இதுவரை (யோகி ஆதித்யாநாத் முதல்வராக இருக்கும் காலம்) ஒரு கலவரம் கூட நிகழவில்லை. ஓர் ஊரடங்கும் பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே மக்கள் பயப்படத் தேவையில்லை. இனி, உத்தரப்பிரதேசத்தில் எந்த தொழிலதிபர்களையும் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது. கடந்த காலத்தில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் இனி எழாது. இதன் காரணமாக மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்ற சூழல் உருவாக்கப்பட்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.