நாளை முதல் யெஸ் வங்கி வழக்கம்போல செயல்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் உள்ள யெஸ் வங்கி, மார்ச் 18-ஆம் தேதி முதல் வழக்கம்போல செயல்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
யெஸ் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. தொடர்ச்சியாக யெஸ் வங்கியை தற்காலிகமாக நிர்வகிக்கும் பொறுப்பை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமாரிடம் ரிசர்வ் வங்கி ஒப்படைத்தது.
யெஸ் வங்கியில் 7,250 கோடி ரூபாயை முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததுடன், மறுசீரமைப்பு செய்ய பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என்றும், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் யெஸ் வங்கி கட்டுப்பாடுகள் நீங்குவதாக கூறிய அவர், மார்ச் 18-ஆம் தேதி முதல் யெஸ் வங்கி வழக்கம்போல செயல்படும் என்றும் உறுதியளித்தார். இது தொடர்பாக யெஸ் வங்கியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.