ரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மும்பையில் கைது
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அவரது மகள்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ராணா கபூர் மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை மும்பையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சில ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அப்போது டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதுபோன்று கடும் நிதி சிக்கலில் இருந்த சில நிறுவனங்களுக்கு தெரிந்தே அதிகளவில் கடன் கொடுத்து ஆதாயம் அடைந்ததாக ராணா கபூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து ராணா கபூரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெறுவதற்காக தனது மகள்கள் பெயரில் போலியான நிறுவனம் ஒன்றை ராணா கபூர் நடத்திவருவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணா கபூர் தொடங்கிய யெஸ் வங்கி, வாராக்கடன் பிரச்னையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தன்வசம் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.