‘யெஸ் வங்கி சீர்குலைவு குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும்’ - நிர்மலா சீதாராமன்

‘யெஸ் வங்கி சீர்குலைவு குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும்’ - நிர்மலா சீதாராமன்
‘யெஸ் வங்கி சீர்குலைவு குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும்’ -  நிர்மலா சீதாராமன்

யெஸ் பேங்க் சீர்குலைந்ததற்கு என்ன காரணம் என ஆராயவும் தவறுக்கு காரணமான நபர்கள் யார் என கண்டறியவும் ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் நலன் காக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அந்நிறுவன நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அவர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

யெஸ் வங்கியின் செயல்பாடுகள் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே கண்காணிக்கப்பட்டு, அதில் நடந்த தவறுகளை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யெஸ் வங்கியை சீரமைக்கும் பணிகள் 30 நாளில் முடிவடையும் என்றும், அவ்வங்கியில் முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கி முன் வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். யெஸ் வங்கி பணியாளர்களுக்கு ஒரு ஆண்டு சம்பளத்துடன் கூடிய பணி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் யெஸ் வங்கி சீர்குலைவுக்கு மோடி அரசே காரணம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் யுனைடெட் வெஸ்டன் வங்கி மூடப்பட்டது என்று சுட்டிக்காட்டினார். நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி வராக்கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com