மோடியிடம் கேட்க தைரியம் இருக்கா ? ஜே.பி.நட்டாவுக்கு சிதம்பரம் சவால்
பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவால் கேட்க முடியுமா என ப.சிதம்பம் சவால் செய்துள்ளார்.
சீனா இந்தியா எல்லைப் பிரச்னை தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “ ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது வராலாற்று துரோகம் ஆகிவிடும் என்றும் சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து மன்மோகன் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் நட்டா “கடந்த 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சீனா 600 முறை இந்தியாவுக்குள் ஊடுருவியது என்றும் அப்போது இந்தியாவுக்குச் சொந்தமான பல சதுர பரப்புளவு நிலங்கள் சீனாவுக்கு கைவிடப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “ பாஜக தலைவர் நட்டா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 2010 - 2013 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்குள் சீனா 600 முறை ஊடுருவியதற்கு விளக்கம் கேட்டுள்ளார்.
ஆம் சீனா இந்தியாவுக்குள் 600 முறை ஊடுருவியது, ஆனால் அந்த ஊடுருவலில் இந்தியாவுக்குச் சொந்தமான எந்த நிலப்பரப்பையும் சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. மேலும் படைவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் எந்த வீரர்களும் உயிரிழக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். ஆனால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 2264 முறை சீனா ஊருவியது குறித்த விளக்கமளிக்க பிரதமர் மோடியிடம் ஜே.பி.நட்டாவால் வலியுறுத்த முடியுமா? நான் சவால் செய்கிறேன். ஜே.பி.நட்டாவுக்கு பிரதமர் மோடியிடம் அந்த கேள்வியை கேட்க தைரியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.