எடியூரப்பா பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரம்: பலத்த பாதுகாப்பு
பரபரப்புகளுக்கு இடையில் கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் அம்மாநில ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பில், நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இறுதியாக, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேவேளையில், கடந்த 15-ஆம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மே 16-ம் தேதி ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து எடியூரப்பாவிற்கு ஆளுநர் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எளிமையாக நடைபெறும் விழாவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த தேசிய தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகையை சுற்றி 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.