விவசாயக் கடன் தள்ளுபடி : எடியூரப்பா முதல் உத்தரவு
கர்நாடகாவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழான விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். பெங்களூரு ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயராலும் விவசாயிகள் பெயராலும் பதவியேற்பதாக எடியூரப்பா தெரிவித்தார். எடியூரப்பாவை தவிர வேறு யாரும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை.
முதலமைச்சரான பின் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் முதல் உத்தரவில் எடியூரப்பா கையெழுத்திட்டார். இதன் பின் பேசிய அவர், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். தாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பது 101% உறுதி என்றும், 5 ஆண்டுகளை தங்கள் அரசு பூர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்கு பின் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டு சேர்ந்து ஆட்சியை பிடிக்க நினைப்பது மனசாட்சிக்கு விரோதமானது என்றும் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.