ஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..!

ஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..!

ஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..!
Published on

 ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் அமைந்துள்ள யமுனை நதி தனது இயல்பை மீட்டெடுத்து மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்பொழுதும் சத்தத்துடனும், பரபரப்புடனும் இயங்கும் சாலைகள் இன்று அமைதியின் உருவமாக மாறியிருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவால் ஒரு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த காலத்தை இயற்கையானது தன்னை புதுப்பித்துக் கொள்ள பயன்படுத்தி வருகிறது. சாலையில் வாகனங்கள் செல்லாததால், தற்போது விலங்குகள் ஒய்யாரமாய் எந்த கவலைமியுன்றி சாலையோரங்களில் நடந்து வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியே வரும் புகை முற்றிலும் தடுக்கப்பட்டதால் மரங்கள் பூத்து சிரித்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது யமுனை நதியும் தன்னைத் தானே உயிர்பித்திருக்கிறது. பல வருடங்களாக யமுனை நதியை தூய்மைப்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் செய்யாததை. இன்று இந்த ஊரடங்கு நாட்கள் செய்திருக்கின்றன. இந்தியாவின் முக்கிய அடையாளமாக திகழும் யமுனை நதியானது, தொழிற்சாலை கழிவுகளாலும், வீட்டு கழிவுகளாலும் அசுத்தமாகியிருந்தது.  இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக டெல்லியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால் கழிவுகள் வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டது.


இதனால் கழிவுகளின் நிறமாக மாறியிருந்த யமுனை இன்று தன்னை புதுப்பித்துக்கொண்டு நீலநிறத்தில் மாறியிருக்கிறது. இது மட்டுமன்றி முன்னதாக நதியில் இருந்து வந்து கொண்டிருந்த துர்நாற்றமும் பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனால், இன்னமும் யமுனை நதியை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கழிவுகள் நதியில் கலந்து கொண்டுதான் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து நிபுணர்கள் கூறும்போது “ யமுனை நதியின் மாசுபாட்டை அளவிட இதை விட சரியான தருணம் வேறு இருக்க முடியாது. ஆகவே அமைப்புகள், நதியின் தற்போதைய நிலையை ஆய்வு நடத்தி விவரங்களை திரட்டி, அந்த விவரங்களை எதிர்காலத்தில் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து யமுனை நதியை காக்க பயன்படுத்த வேண்டும்” என்றனர் 


இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறும்போது “ யமுனை நதியின் தரம் உயர்ந்துள்ளது. விரைவில் நதி குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு விவரங்கள் எடுக்கப்படும். முன்னதாக ஊரடங்கு உத்தரவால் மாறுபட்ட காற்றின் தரத்தை ஆய்வு செய்வதுபோல் நதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்றது.

யமுனை நதியில் உளள் நீர்வாழ் ஆதாரங்கள் தொழிற்சாலை கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறது எனக் கூறி பல முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனோஜ் மிஸ்ரா கூறும் போது “ இந்த நேரம்தான் தொழிற்சாலை கழிவுகள் நதிகளில் கலப்பதை எதிர்த்து போராடுவதற்கு சரியான நேரம். நதியின் இந்த மாற்றம் தொழிற்சாலை கழிவுகளின் தாக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com