தீவிர புயலாக மாறியது 'யாஸ்' - ஒடிசா, மேற்கு வங்கம் விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

தீவிர புயலாக மாறியது 'யாஸ்' - ஒடிசா, மேற்கு வங்கம் விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

தீவிர புயலாக மாறியது 'யாஸ்' - ஒடிசா, மேற்கு வங்கம் விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை
Published on

வங்கக் கடலில் தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால், ஒடிசாவில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதி தீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பட்டுள்ளனர். 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன.

கிழக்குக்கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேச முதலமைச்சர்கள் , அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார். மேலும் மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதி அளித்தார்.

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக ராமேஸ்வரம், அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பும் நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

படம் : TNIE

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com