போராட்டத்தை தொடர்ந்து கொண்டே அரசு வேலைகளில் இணைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த வீரர் வீராங்கனைகள் தங்களது அரசு வேலைகளில் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்களது போராட்டத்தை தொடர்வதாகவும் அறிவித்துள்ளனர்.
Wrestlers protest against Brij Bhushan
Wrestlers protest against Brij BhushanTwitter

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராடத் தொடங்கினர். இவர்களுக்கு பஜிரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் பக்கபலமாய் நிற்கின்றனர்.

பிறகு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டதற்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். எனினும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்த தொடங்கினர். 35 நாட்களுக்கு மேலாக இவர்களது போராட்டம் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட முயன்றவர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Protesting wrestler sakshi malik
Protesting wrestler sakshi malikPTI

ஏற்கனவே இந்த வீரர், வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து அவர்கள் போராடி வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும் களமிறங்கின.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போராட்டத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளை அழைத்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்றாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் வடக்கு ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரியும் சாக்ஷி மாலிக் இன்று டெல்லியில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் தனது பணியினை தொடர்ந்தார். இதனை அடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார் என்ற தகவல்கள் வெளியானது.

Sakshi Malik
Sakshi MalikFile Image

இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்த சாக்ஷி மாலிக் தாங்கள் போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை கைவிடவும் மாட்டோம் என்றும் அதே நேரத்தில் ரயில்வே துறையில் தனது கடமையை தான் நிறைவேற்றுவதற்காக பணியில் சேர்ந்ததாகவும் அமைதி வழியிலான தங்களது போராட்டம் தனது ரயில்வே பணியுடன் தொடரும் எனவும் கூறினார். மேலும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவரைப் போலவே பஜ்ரங் புனியா உள்ளிட்ட மற்ற போராட்ட வீரர்கள் தங்களது அரசு வேலைகளில் சேர்ந்து உள்ள நிலையில் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com