புத்தாண்டில் அதிக குழந்தைகள் பிறந்த நாடு - இந்தியா சாதனை..!
புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுக்க 3,95,078 பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்பு என்றாலே மகிழ்ச்சியான விசயம் தான் அதிலும் வருடத்தின் முதல் நாள் பிறக்கும் குழந்தைகள் இன்னுமே சிறப்பு. அவர்களின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் இல்லையா? ஒவ்வொரு ஆண்டும் UNICEF புத்தாண்டு நாளில் பிறந்த குழந்தைகளை கொண்டாடுகிறது. அதன் படி 2020 புத்தாண்டு நாளில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட நான்கு லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
இவ்வருட புத்தாண்டு நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் சில நாடுகளின் பட்டியலை UNICEF வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்கா 10,452 குழந்தைகளும், காங்கோவில் 10,247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. மேலும் இந்த ஆண்டில் உலகில் பிறந்த முதல் குழந்தை பசிபிக் கடலின் புஜி தீவில் பிறந்துள்ளது. அக்குழந்தை 2.9 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 25 லட்சம் குழந்தைகள் பிறந்த முப்பது நாள்களுக்குள்ளாகவே இறந்து போயின, ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 47 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவிக்கிறது. Every Child Alive campaign மூலம் யுனிசெஃப் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் இந்த ஆண்டு ஜனவரி முதல் நாள் இந்தியாவில் அதிக பட்சமாக 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இதன் மூலம் இந்தியா பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.