திருச்சூரில் களை கட்டிய பூரம் திருவிழா - மனம் கவர்ந்த யானைகள் அணிவகுப்பு
உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பை லட்சக்கணக்காக பக்தர்கள் கண்டு களித்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்கள் கூடுவது வழக்கம். கம்பீர நடை போடும் அந்த யானை அணிவகுப்புக்கு கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் யானைகள் வரவழைக்கப்படுகின்றன.
யானைகள் அணிவகுப்புக்கு தலைமை தாங்கும், பத்தரை அடி உயரம் கொண்ட தெச்சிகொட்டுகாவு ராமச்சந்திரன் என்ற யானைக்கு கடந்த ஆண்டு திருவிழாவின்போது மதம் பிடித்தது. இதையடுத்து இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை பங்கேற்கக் கூடாது என அரசு முட்டுக்கட்டை போட்டது. இதற்கு பிற யானைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் ராமச்சந்திரன் யானை மருத்துவ பரிசோதனைக்குப் பின் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து இன்று வடக்குநாதர் கோயிலில் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டப்பட்டது. வடக்குநாதர் கோயில் அருகே உள்ள தெக்கன்காடு மைதானத்தில் நடைபெற்ற யானை அணிவகுப்பில் 15 யானைகள் கொண்ட முதல் குழு, கிருஷ்ணன் திருவுருவச்சிலையை சுமந்து, தெக்கன்பாடி மைதானத்தை அடைந்தது. அதே சமயத்தில் மற்றொரு 15 யானைகள் கொண்ட குழு, துர்கா சிலையை சுமந்து தெக்கன்காடு மைதானத்தை அடைந்தது. மனம் கவரும் செண்டை தாளத்துடன், யானைகள் ஊர்லம் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்காக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திருவிழா, 18 ஆம் நூற்றாண்டில் திருச்சூரை ஆண்ட ராஜா ராமவர்மா காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.