இந்திய அணைகளை பலப்படுத்த ரூ.11 ஆயிரம் கோடி நிதி ! உலக வங்கி ஒப்புதல்
இந்தியாவில் உள்ள 733 அணைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்துக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அணைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு அணை மறுசீரமைப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருக்கும் 198 அணைகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இருக்கும் 733 அணைகளை பராமரிப்பதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், ''சர்வதேச அணை பாதுகாப்பு மாநாட்டில் இந்திய அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் 700க்கும் அதிகமான அணைகளின் பராமரிப்புக்காக ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அணை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இந்தியாவில் நடைபெறும் அணை பராமரிப்பு திருப்திகரமாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 5 ஆயிரத்து 264 அணைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 80 சதவீத அணைகள் 25 வருடங்கள் பழமையானவை. 213 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

